ராமன் தேடிய
சீதை!
சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. "என்னை கொன்றுவிடாதீர்கள், நான்
ஒரு பாவமும் அறியாதவள்" சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப்
பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும்
செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.
அப்பொழுது சத்தம் கேட்டு அங்கே அனுமானும், லக்குமணனும் மற்றவர்களும் ஓடி வந்தார்கள்.
அவர்கள் ஓடி வருவதைப் பார்த்த ராமன் சீதையை கருக்கிக் கொண்டிருந்த தீயை அணைத்தான்.
"சீதை தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கிவிட்டாள், நல்ல வேளை
அக்கினிதேவன் காப்பாற்றி விட்டான்" ராமன் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
அப்பொழுது சீதை தப்பி விட்டாளே தவிர, அவளது வாழ்க்கை அதன் பிறகு நரகமாகி விட்டது.
தினமும் ராமன் குடித்துவிட்டு வந்து சீதையை அடித்து உதைப்பான். மிகக் கொடிய
வார்த்தைகளால் அவளை துன்புறுத்துவான். சீதைக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாமல்
போய்விட்டது. இடையிடையே சீதை தன்னுடன் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்ட
ராவணனை நினைத்துக் கொள்வாள்.
ஒரு நாள் ராமன் குடித்துவிட்டு போதை தலைக்கேற ஆடியாடி வந்தான். சீதையைக் கண்மண்
தெரியாமல் அடித்தான். அவளை இனிமேல் தன்முன் நிற்கக் கூடாது என்று சொல்லி காட்டுக்கு
விரட்டி விட்டான். காட்டில் உள்ள மிருகங்களுக்கு சீதை பலியாகட்டும் என்று நினைத்துக்
கொண்டான்
ஆனால் சீதை காட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டாள். அங்கே இரண்டு குழந்தைகளையும்
பெற்றெடுத்தாள். செய்தி ராமனை எட்டியது. ராமனுடைய சந்தேகம் மேலும் அதிகரித்தது.
சீதையை இனியும் உயிருடன் விடக் கூடாது என்று நினைத்தான். காடெல்லாம் தேடி அலைந்தான்.
ஆனால் சீதையை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நேரத்தில் சலித்துப் போய் சீதையை தேடுவதை ராமன் கைவிட்டுவிட்டான். தன்னுடைய
வெறியை குடித்தும் பெண்களுடன் கும்மாளமிட்டும் ஆற்றிக் கொண்டான். கிண்ணரி, உதமா,
நாட்டியப் பெண்கள், வேலைக்காரப் பெண்கள் என்று யாரையும் ராமன் விட்டு வைக்கவில்லை.
அனைவரிடமும் தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டான்.
ஒரு நாள் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்ற ராமனின் படைவீரர்கள் ராமன் தேடிய சீதையை
கண்டு விட்டனர். ராமனிடம் ஓடிச் சென்று, அவன் தேடிய சீதையை கண்ட செய்தியை
சொன்னார்கள். ராமன் வெறியோடு காட்டுக்கு புறப்பட்டான்.
இந்த முறை சீதையால் தப்ப முடியாது போய்விட்டது. சீதை ராமனிடம் அகப்பட்டு விட்டாள்.
ராமன் சீதையை கடுமையாக சித்திரவதை செய்தான். சீதை பலவாறு கெஞ்சியும் விடவில்லை.
சித்திரவதை தாளாது சீதை மூர்ச்சித்துவிட்டாள். ராமன் ஒரு குழியை தோண்டி அதற்குள்
போட்டு சீதையை மூடினான்.
"சீதை பூமாதேவியன் மகள் அல்லவா! அதனால் பூமியே பிளந்து சீதையை உள் வாங்கிக் கொண்டது"
சில காலம் கழித்து அயோத்தியில் மக்கள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
- வி.சபேசன்
சாத்தான்!
அவன் அந்த நடைபாதையில் இருந்த இருக்கை ஒன்றில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி
அமர்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும் அச்சங்களும் கலகம் செய்து
கொண்டிருந்தன.
அவனிடம் நிரந்தர வதிவிட அனுமதி இல்லை. நிரந்தர வதிவிட அனுமதி இல்லை என்பதால்
நிரந்தர வேலை இல்லை. நிரந்தர வேலை இல்லை என்பதால் வருவாய் போதுமானதாக இல்லை.
வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும் வர ஆரம்பித்து இருந்தன. ஊரில் இருந்து
வருகின்ற கடிதங்களும் அவனுடைய மனச்சுமையை கூட்டுவதாகவே இருந்தன.
இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு அவனுக்கு எந்த வழியும் தென்படவில்லை.
எதிர்காலத்தை நினைக்க அச்சமாக இருந்தது. யாரவாது வந்து தன்னை இந்தப் பிரச்சனைகளில்
இருந்து கைதூக்கி விட மாட்டார்களா என்று அவன் ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டான்.
அப்பொழுதுதான் அவர்கள் அவனிடம் வந்தார்கள். அவர்கள் மிகவும் அழகாகவும் நாகரீகமாகவும்
உடை அணிந்திருந்தார்கள். கையில் கருப்பு அட்டையைக் கொண்ட ஒரு தடித்த புத்தகத்தை
வைத்திருந்தார்கள். அவர்கள் அவனிடம் மெதுவாகவும் அன்பாகவும் பேச ஆரம்பித்தார்கள்.
அனைத்து துன்பங்களிடம் இருந்து விடுவிக்க தங்களிடம் வழி உண்டு என்று சொன்னார்கள்.
தேவனை சரணடையுங்கள், உங்களை துன்பங்களில் இருந்து அவர் விடுவிப்பார் என்றார்கள்.
அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்தார்கள்.
ஒரு முறை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வாருங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவனும்
அரை மனத்தோடு போனான். எல்லோரும் அவனை அன்பாக வரவேற்றார்கள். "சகோதரன்" என்று
அழைத்தார்கள்.
என்ன ஆச்சரியம்?! அடுத்த நாள் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் நிரந்தர வதிவிட
அனுமதி தருவதாக கடிதம் வந்திருந்தது. அவன் மெய்சிலிர்த்துப் போனான். தேவனின் செயலை
எண்ணிப் பூரித்துப் போய் நின்றான். சில வாரங்களில் அவன் ஒரு நல்ல வேலையையும்
பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து அவனுடைய பல பிரச்சனைகள் குறைந்து
போயிருந்தன.
இப்பொழுது அவன் தேவனின் பெயரை மட்டும் உச்சரிக்கின்ற ஒருவனாக மாறிப் போயிருந்தான்.
அவனுடைய நண்பர்கள் வட்டமும் மாறிப் போயிருந்தது. கையில் எப்பொழுதும் கருப்பு
அட்டையைக் கொண்ட அந்த தடித்த புத்தகத்தை வைத்திருந்தான். அதை மட்டும்தான் அவன்
வாசித்துக் கொண்டிருந்தான்
தமிழ் பத்திரிகைகளை படிப்பதை நிறுத்தினான். திரைப் படங்களும், திரை இசைப் பாடல்களும்
குப்பைக்குள் போயின. சுருதி கொஞ்சமும் இல்லாமல் "தேவனே" என்று அலறுகின்ற சத்தங்கள்
அவனுக்கு இசையாகிப் போனது. அவைகளை கேட்கின்ற பொழுது மன அமைதி பிறப்பதாக நம்பினான்.
செய்து கொண்டிருந்த பங்களிப்புக்களையும் நிறுத்தினான். தேவனால் மட்டுமே விடுதலை
கொடுக்க முடியும் என்றான். வீடு முழுவதும் தேவனின் வசனங்கள் நிறைந்திருந்தது.
பத்திரிகைகள், திரைப்படங்கள், யுத்தங்கள் அனைத்தும் சாத்தானின் படைப்புக்கள் என்றான்.
தேவனை ஏற்காத அனைவரும் சாத்தான்கள் என்றான். தேவனைப் பற்றிப் பேசுகின்ற போது
பிரகாசமாகத் தெரிகின்ற அவனுடைய முகம், சாத்தானையும், சாத்தானின் படைப்புக்களையும்
பற்றிப் பேசுகின்ற போது விகாரமாக தெரியத் தொடங்கியது.
அவன் தேவனை நோக்கி ஜெபிக்கின்ற போதும், தேவனின் வசனங்களை வாசிக்கின்ற போதும்
தொலைபேசி எடுத்தும், நேரில் வந்தும் தொல்லை கொடுத்தவர்கள் அவனுக்கு சாத்தான்களாக
தெரிந்தார்கள். மனைவியும் பிள்ளைகளும் கூட சாத்தான்களாக மாறியிருந்தார்கள்.
ஒரு நேரத்தில் அவன் தனித்துப் போனான். ஆனால் தேவன் தன்னுடன் இருப்பதாக சொன்னான்.
தேவனைக் கண்டதாகவும் பேசியதாகவும் சொன்னான். பிரார்த்தனைக் கூட்டத்தில் மனிதர்களை
சந்திப்பதாக சொன்னான். இப்பொழுது அவன் தனக்கத்தானே பேசவும் தொடங்கியிருந்தான்.
ஒரு நாள் அவன்
தனக்குதானே பேசியபடி வீதியில்
நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக வந்த ஒரு கார் அவன் மீது பயங்கரமாக
மோதியது. தூக்கி வீசப்பட்ட அவன் சிறிது நேரம் துடிதுடித்து விட்டு இறந்து போனான்.
அதுவரை அவனைப் பீடித்திருந்த சாத்தான் ஒரு வெற்றிப்புன்னகையோடு வெளிக்கிளம்பி
கருப்புப் புத்தகத்தை தூக்கியபடி அடுத்த இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமானான்.
- வி.சபேசன்
கிருஸ்ணனும் 60 சிறுவர்களும்! (சித்திரைப் புத்தாண்டுச் சிறப்புச் சிறுகதை)
கிருஸ்ணன் நாரதரை முறைத்துப் பார்த்தான். "உன்னால்தான் எல்லாம்" என்பது போல்
அவனுடைய பார்வை இருந்தது. நாரதன் தலைகுனிந்து நின்றான். இருவருடைய மனதிற்குள்ளும்
அந்த 60 சிறுவர்களின் முகங்களும் ஒரு முறை வந்து சென்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு
நடந்த அந்தச் சம்பவம் அவர்களின் கண் முன் வந்தது.
அப்பொழுது கிருஸ்ணன் எல்லாவற்றையும் மறந்து பெண்களுடன் மட்டும் சல்லாபம் நடத்திக்
கொண்டிருந்தான். ஒரு நேரத்தில் அவன் அனைத்துக் கோபியர்களையும் அனுபவித்து முடித்து
விட்டிருந்தான். கிருஸ்ணனுக்கு பெண்கள் என்றாலே சலிப்புத்தட்டவும் தொடங்கியிருந்தது.
அப்படியான ஒரு நேரத்தில்தான் நாரதன் அங்கு வந்து சேர்ந்தான்.
நாரதனுக்கு இயல்பாகவே ஆண்கள் மீது ஒரளவு நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தோடுதான்
கிருஸ்ணனிடம் வந்திருந்தான். நாரதனுக்கு கிருஸ்ணனை எப்படி வலையில் வீழ்த்த வேண்டும்
என்பது தெரிந்திருந்தது. கிருஸ்ணனுக்கு நாரதனைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்கியது. சுக
விசாரிப்புகள் முடிந்து பழைய கதைகளை இருவரும் பேசத் தொடங்கினார்கள்.
"பாற்கடலை கடைந்த போது நீங்களும் சிவனும் கலவியில் ஈடுபட்டீர்கள் அல்லவா! அந்தச்
சம்பத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று நாரதன் மெதுவாக தூண்டில் போட்டான்.
அவ்வளவுதான். பல வருடங்களாக வெளிப்படாது கிருஸ்ணனின் அடி மனதில்
உறங்கிக்கொண்டிருந்த அந்தத் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயோடு வந்த
நாரதன் தீயை அணைப்பதற்கு உதவினான்.
அந்தக் கணத்தில் தீ அணைந்து போனாலும், அது மீண்டும் மீண்டும் வந்தது. அவர்கள்
இருவரும் ஆண்களை தேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டியது ஏதுமறியாச்
சிறுவர்கள்தான். அதுவும் கிருஸ்ணனை கடவுள் என்று அப்பாவித்தனமாக நம்பிய தாய்மார்கள்
தாங்களாகவே அவனிடம் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். தம்முடைய பிள்ளைகளைப்
போல் பார்ப்போம் என்று சொல்லி கிருஸ்ணனும் நாரதனும் அந்தச் சிறுவர்களைக் கொண்டு
போனார்கள்.
கிருஸ்ணனும் நாரதனும் தங்களின் வெறி தீருமட்டும் அந்தச் சிறுவர்களை வல்லுறவுக்கு
உட்படுத்தினார்கள். இதன் மூலம் கடவுளைக் காண முடியும் என்று அந்தச் சிறுவர்களை நம்ப
வைத்தார்கள். வருடக் கணக்கில் அந்தக் கொடுமை நடந்தது. 60 சிறுவர்கள் இப்படித்
துன்புறுத்தப்பட்டார்கள்.
பல வருடங்கள் கடந்த பின்பு அந்தச் சம்பவம் இப்பொழுது கிருஸ்ணனின் மனதை உறுத்தத்
தொடங்கியிருந்தது. நாரதனும் தவறு செய்து விட்டோமோ என்று சிந்திக்கத்
தொடங்கியிருந்தான். நாரதனை முறைத்துப் பார்த்த கிருஸ்ணன் "அந்தச் சிறுவர்களுக்கு
ஏதாவது செய்ய வேண்டும் நாரதனே!" என்று மெதுவாகச் சொன்னான். நாரதன் ஒன்றும்
விளங்காமல் கிருஸ்ணனைப் பார்த்தான்.
ஆட்சி கிருஸ்ணனின் கையில் இருப்பதால், அவனால் எதையும் செய்ய முடியும் என்று
நாரதனுக்கு தெரியும். ஆனால் என்ன செய்யப் போகிறான் என்றுதான் நாரதனுக்கு
தெரியவில்லை. "ஒவ்வொரு சிறுவனின் பெயரிலும் ஒவ்வொரு அண்டையும் பிரகடனப்படுத்துவோம்!
பிரபவனில் இருந்து அட்சயன் வரையான 60பேரின் பெயரிலும் புத்தாண்டு கொண்டாடச் செய்வோம்!
அந்தச் சிறுவர்களை எனக்கும் உனக்கும் பிறந்த பிள்ளைகள் என்று சொல்வோம்!" கிருஸ்ணன்
உற்சாகமாகச் சொன்னான்.
நாரதனுக்கு இப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை. இது எப்படிச் சாத்தியமாகும்? ஆணுக்கும்
ஆணுக்கும் எப்படி பிள்ளை பிறக்கும்? இதை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே?
ஏற்கனவே கிருஸ்ணனும் நாரதனும் நடத்திய கூத்துக்கள் பற்றி மக்கள் அரசல்புரசலாக
கதைக்கிறார்கள்! இந்த நிலையில் மக்களிடம் என்ன கதை சொல்லி இந்த ஆண்டு முறையை
புகுத்துவது? நாரதனின் மனதில் பல கேள்விகள்.
கிருஸ்ணன் நாரதனைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தான். "எமது ஆரியப் பெருங்குடி மக்கள்
இந்த புத்தாண்டு முறையை கொண்டாடப் போவதில்லை நாரதனே! எதை சொன்னாலும் எதிர் கேள்வி
கேட்காமல் ஆட்டு மந்தைகள் மாதிரி தலையாட்டுகின்ற எங்களின் அடிமைகள் இந்தப்
புத்தாண்டைக் கொண்டாடப் போகிறார்கள்" கிருஸ்ணன் வெடிச்சிரிப்போடு சொன்னான்.
"அடிமைகளா?" நாரதன் ஆச்சரியமாய் கேட்டான். கிருஸ்ணன் தெற்கு நோக்கி கையை நீட்டினான்.
- வி.சபேசன்
முக்கிய குறிப்பு: கிருஸ்ணனும் நாரதனும் 60 ஆண்டுகளாக கலவி புரிந்து, இருவருக்கும் 60 பிள்ளைகள் பிறந்து, அந்தப் பிள்ளைகளின் பெயரிலேயே சித்திரைப்புத்தாண்டு கொண்டாடப்படுவதாக இந்து மதப் புராணம் சொல்கிறது. கிருஸ்ணன் நாரதன் தம்பதிகளின் 21வது பிள்ளையாகிய "சர்வஜித்" பெயரில் இந்தமுறை சித்திரைப் புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் "சர்வஜித்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அவளும் அவளும்!
நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள்
வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக்
காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது.
ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்..
அம்மா,
நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக்
கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப்
போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும்,
அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்புக்களையும் மட்டுமே
மிச்சம் வைக்கும் என்றும் எனக்கு தெரியும் அம்மா.
நான் துணையாக தேர்ந்தெடுத்தது ஒருவரை அல்ல! ஒருத்தியை! எங்கள் வீட்டிற்கு அடிக்கடி
என்னோடு வருகின்ற, நீங்களும் அப்பாவும் "வெள்ளைக்காரி என்றாலும் நல்ல பிள்ளை" என்று
அடிக்கடி புகழுகின்ற அவள்தான் அவள். நீங்கள் அவளை நல்ல பிள்ளை என்று சொல்வதற்கு,
அவளுக்கு ஆண்கள் யாரும் நெருக்கமான நண்பர்களாக இல்லை என்பதுதான் காரணம் என்று
எனக்கு தெரியும். ஆனால் நாங்களே காதலிப்போம் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க
மாட்டீர்கள். இந்த அதிர்ச்சியை உங்களுக்கு தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது
குறித்து எனக்கு நிறைய வருத்தம் உண்டு அம்மா.
ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். நான் அவளைக் காதலிப்பது அவள் "அவள்" என்பதற்காக
அல்ல. அவள் ஒரு "அவனாக" இருந்தாலும் காதலித்திருப்பேன். நான் காதலிக்கிறேன்.
காதலிக்கின்ற துணையுடன் வாழப் போகிறேன். அவ்வளவுதான். இவைகள் உங்களுக்குப் புரியப்
போவதில்லை. புரிய வைக்கின்ற முயற்சியில் நேரமும் காலமும் வீணாவதை விட, அந்த நேரத்தை
காதலில் வெற்றி பெறுவதற்கு பயன்படுத்துவது நல்லது என்று எனக்குப் படுகிறது...........
அதற்கு மேல் அவளால் கடிதத்தை படிக்க முடியவில்லை. இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்.
மகளை "செல்லம்" குஞ்சு" என்று பாசத்தை கொட்டி வளர்த்தவள் அவள். மகள் இல்லாமல் ஒரு
நாள் கூட அவள் இருந்ததில்லை. அதை விட தன்னுடைய மகள் மற்ற பெண்களைப் போல் பருவம்
வந்ததும் ஆண் துணை தேடாது இருக்கிறாள் என்று அவள் கொண்டிருந்த பெருமையில் இப்படி
ஒரு இடி விழும் என்றும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
மகள் வேறு ஒருத்தியுடன் வாழப் போய்விட்டாள் என்பதை அவளால் தாங்க முடியவில்லை.
அத்தோடு சுற்றி இருப்பவர்கள் பேசப் போகின்ற பேச்சுக்களை நினைக்க அவளுக்கு தலையை
சுற்றியது. இதை விட இன்னும் ஒரு விடயம் அவளிற்கு பெரும் அச்சத்தைக் கொடுத்தது.
அவளுடைய முரட்டுக் கணவன் அவனுடைய மருமகளின் திருமணத்திற்காக அயல்நாடு
சென்றிருக்கிறான். வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும். அவன் வந்து இதை எல்லாம்
கேட்டவுடன் நடக்கப்போவதை நினைக்கவே அவளிற்கு அச்சமாக இருந்தது. கொலை விழுவதை
தவிர்க்க முடியாது என்று அவள் முடிவே செய்துவிட்டாள். இரண்டு முறை கணவன்
தொலைபேசியில் பேசிய போதும் அவள் எதையும் சொல்லவில்லை. சொல்வதற்கு அவளுக்கு துணிவும்
இல்லை. அந்த நான்கு நாட்களும் அவள் உறக்கமற்ற நரகத்தை அனுபித்தாள். மகள், கணவன்,
சுற்றம் என்று அனைத்தும் மாறி மாறி வந்து அவளிற்கு பெரும் வேதனையைக் கொடுத்தன.
அவளிற்கு விருப்பம் இல்லாமலேயே அவன் வருகின்ற நாளும் வந்தது. வந்தவனிடம் மகளைப்
பற்றி தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள். அவள் முடிக்கும் முன்பே அவன் வெடித்தான்.
அவளை கண் மண் தெரியாமல் அடித்தான். பெல்ற்றைக் கழற்றி சுழற்றி சுழற்றி அடித்தான். "உன்னுடைய
வளர்ப்பால்தானடி எல்லாம்..." என்று அவன் ஆரம்பித்து பேசிய தூசணை வார்த்தைகள் மிகக்
கொடுரமானவை. ஒரு அரை மணி நேரமாக அவளை பெல்ற்றாலும் சொல்லாலும் சித்தரவதை செய்தபின்
களைத்துப் போய் அமர்ந்தான்.
அவள் உடலிலும் மனதிலும் வலியைத் தாங்கியபடி மெதுவாக கட்டிலை நோக்கி நடந்தாள்.
கட்டிலில் மெதுவாக சாய்ந்த பொழுது மின்னலைப் போல் ஒரு எண்ணம் அவள் மனதிற்குள்
வந்தது. "என்ரை செல்லம் இப்படி ஆரிட்டையும் அடி வாங்கத் தேவையில்லை".
இப்பொழுது அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.
- வி.சபேசன்
ஒரு காதல்
கதை!
அவனும் அவளும் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அவன் அவளுக்காக
காத்திருப்பான். காத்திருப்பது சுகம் என்று கவிதை சொல்வான். அவள் அவனுடைய கவிதை
கேட்பதற்காகவே நேரம் பிந்தி வருவாள். அவனும் அவளும் யாரும் இல்லாத நேரத்தில், யாரும்
இல்லாத இடத்தில் சந்தித்துக் கொள்வார்கள். அதிகமாகப் பேசி கொஞ்சமாக தொட்டுக்
கொள்வார்கள். அவனும் அவளும் வீதியில் காணுகின்ற பொழுது கண்காளால் மட்டும் பேசிக்
கொள்வார்கள். காணாத போது மனதால் பேசிக் கொள்வார்கள்.
அவனும் அவளும் பேசிக் கொள்வதைப் பற்றி ஊரும் பேசத் தொடங்கியது. அரசல்புரசலாக
தொடங்கியது ஒரு நேரத்தில் அதுவே எங்கு பார்த்தாலும் பேச்சு என்று ஆகிப் போனது. வழமை
போன்று ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகுதான் அவனுடைய வீட்டிலும் அவளுடைய வீட்டிலும்
தெரிய வந்தது. இரண்டு வீடுகளிலும் பூகம்பம் வெடித்தது. ஒரு வீட்டில் தூக்குக்
கயிறும், மற்றைய வீட்டில் அரளி விதையும் ஆயுதங்கள் ஆகின. ஆனால் யாரும் இறக்கவில்லை.
பெரியவர்கள் இறந்து விடுவோம் என்பார்கள். ஆனால் உண்மையில் இறந்து போவது
காதலிப்பவர்கள்தானே?
நல்ல வேளை! அவனும் அவளும் அந்த முடிவை எடுக்கவில்லை. காதல் மட்டும் செய்வோம் என்ற
முடிவை எடுத்தார்கள். அவளை அவளுடைய வீட்டார் தூர தேசத்தில் யாரோ ஒருவனுக்கு கலியாணம்
செய்து வைத்துவிட்டார்கள். சிலகாலம் கழித்து அவனுக்கும் அவனுடைய வீட்டார் பக்கத்து
ஊரில் ஒரு பெண்ணை கலியாணம் செய்து வைத்தார்கள்.
காலம் உருண்டோடியது. இப்பொழுது அவன் "அவர்" ஆகி விட்டார். அவருக்கு ஊரில் நல்ல
மதிப்பு இருந்தது. அவருடைய பேரப்பிள்ளைகள் தாத்தாவின் பெயரைச் சொல்லி தங்களை
புதியவர்களிடம் அறிமுகப்படுத்துகின்ற அளவிற்கு அவர் எல்லோரிடமும் அறிமுகமாகி
இருந்தார். ஊர் மக்களுக்கு பல உதவிகள் செய்தார். நலத்திட்டங்களுக்கு வாரி வழங்கினார்.
அத்துடன் பல திட்டங்களை அவரே உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். மாதத்திற்கு ஒரு
தடவையாவது பத்திரிகைகளில் அவரைப் பற்றிய செய்தி வரும்.
அவர் அவ்வளவையும் செய்தது அவளுக்காக. அவள் என்ன ஆனாள் என்று அவருக்கு தெரியாது.
ஆனால் எங்கோ ஒரு மூலையில் அவள் இருப்பாள் என்றும், அவளுடைய இதயத்தின் ஒரு மூலையில்
அவரும் இருப்பார் என்றும் அவர் நம்பினார். அவரைப் பற்றி யாராவது ஒருவர் அவளிடம்
சொல்வார்கள் என்றும், அவருடைய பெயர் பத்திரிகையில் வருகின்ற போது அவள் படித்து
பரவசம் அடைவாள் என்றும் அவர் அடிக்கடி கற்பனை செய்து கொள்வார். அவருடைய கற்பனைகள்
அத்தோடு நின்று விடுவதில்லை.
அவருடைய அன்பான மனைவிக்கு வெளியே போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவனும் அவளும்
சந்தித்த அந்த இடங்களுக்கு சென்று சில நிமிடங்கள் இருந்து விட்டு வருவார். சில
நாட்களில் மணிக் கணக்கிலும் இருப்பது உண்டு. ஆனால் அவர் அவளை தேட முயற்சி செய்தது
இல்லை. இதயத்தில் இருப்பவளை எதற்கு தேட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் அவள் வயதினை ஒத்த பெண்களை கண்டால் அவளாக இருக்குமோ என்று அவர் மங்கலான
கண்களால் கூர்ந்து கவனிப்பது உண்டு.
இயற்கையின் விதிப்படி ஒரு நாள் அவர் படுக்கையில் வீழ்ந்து விட்டார். வைத்தியர்கள்
வந்தார்கள். அவர்களால் நாளை மட்டும்தான் குறிக்க முடிந்தது. நிறையப் பேர் அவரை
வந்து பார்த்தார்கள். ஒவ்வொருவர் வருகின்ற பொழுதும் அவர் கண் முழித்துப் பார்ப்பார்.
அவளாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். அவர் விரைவில் விடைபெறப் போகிறார் என்ற செய்தி
பல இடங்களில் பரவியது. பத்திரிகைகளிலும் வந்தது. அவரைப் பார்க்க வருபவர்களின்
எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. அவள் வரவில்லை. வைத்தியர் குறித்த நாளும் முடிந்து
விட்டது.
அவர் உயிரைக் கையில் பிடித்திருந்தார். எப்படியும் அவள் செய்தி கேட்டுப் பார்க்க
வருவாள் என்று அவர் போக இருந்த உயிரை பிடித்து வைத்திருந்தார். இயங்காமல்
இருக்கின்ற அவர் இறப்பது நல்லது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்
தொடங்கியது. இந்த நிலையில் உயிரோடு இருப்பது அவருக்கும் மற்றவர்களுக்கும் சுமை
என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அவருடைய விழிகள் வாசலைப் பார்த்தபடி
இருந்தன. அவள் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் கடும் வேதனையை
அனுபவித்தார்.
அன்று ஒரு நாள் வழமை போன்று விடிந்தது. அன்றும் நிறையப் பேர் அவரைப் பார்க்க
வந்திருந்தார்கள். வந்தவர்களில் இருவர் பேசிக் கொள்வது அவருக்கு கேட்டது. "இப்பொழுதே
இத்தனை பேர் வந்தால், இவர் இறந்தால் எத்தனை பேர் வருவார்கள், இப்பொழுது வராதவர்களும்
அப்பொழுது வருவார்களே" அவர்கள் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டதும் அவருடைய உடல்
ஒரு முறை சிலிர்த்தது. தினம் தினம் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த அவர் நிம்மதியாகக்
கண்ணை மூடினார்.
- வி.சபேசன்
தாலி!
கி-பி
17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம்
அந்த
மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர்
குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில்
தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும்
கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப்
பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால்
ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண்
அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும்
தூக்கிக் கொண்டு போனார்கள்.
இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்சியோடு பார்த்துக்
கொண்டிருந்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரியான அவளும் அந்தக் கிராமத்தில்தான்
இருக்கிறாள். அவளுக்கு தெரிந்து இத்தோடு பதினைந்து பெண்களை கொண்டு போய்விட்டார்கள்.
ஆட்சி அவர்களின் கையில் இருப்பதால் அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
அவள் கலக்கத்தோடும் சிந்தனைகளோடும் வீடு நோக்கி நடந்தாள்.
அவள் கணவன் வெளியூரில் நடக்கும் ஏறுதழுவல் விளையாட்டிற்கு சென்றிருந்தான். அவன்
அந்த ஊரிலேயே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். சிலம்பம், மல்யுத்தம் என்று அனைத்தும்
கற்றிருந்தான். அவளும் ஒரு வீரனையே திருமணம் செய்வேன் என்று காத்திருந்து காளை
அடக்கிய அவனை திருமணம் செய்து கொண்டாள். அவனைப் பற்றியும் அவன் வீரம் பற்றியும்
அவள் மிகவும் பெருமை கொண்டிந்தாள். இந்தக் கிராமத்தில் உள்ள மற்ற ஆண்களும் என்
கணவனைப் போல் வீரர்களாக இருந்தால், இந்த வெறியர்களை விரட்டி அடித்து விடலாம் என்று
மற்றைய பெண்களுடன் பேசுவாள். அதில் அவள் கணவன் குறித்த பெருமையோடு அந்த வெறியர்களை
துரத்தி அடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் சேர்ந்திருக்கும்.
இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டிருந்த அவர்களின் வெறியாட்டத்தை இப்பொழுது
கண்ணாலும் கண்டு விட்டாள். அவளால் இருப்புக் கொள்ள முடியவில்லை. விட்டுக்குள்ளே
அங்கும் இங்கும் நடந்தபடி அடிக்கடி வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் அவளது கணவன் குதிரையில் கம்பீரமாக வருவது தெரிந்தது.
கணவன் வீட்டுக்குள் வந்ததும்தான் கவனித்தாள். கையில் ஒரு வினோதமான பொருள் ஒன்றை
வைத்திருந்தான். மஞ்சள் நிறத்தில் மாட்டுக்கு கட்டுகின்ற கயிறின் பருமனோடு அது
இருந்தது. தூக்குக் கயிறும் அப்படித்தான் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.
"இது என்ன?" ஆச்சரியமாக அவனிடம் கேட்டாள். "இது தாலி" அவன் சொன்னான். அவளுக்கு
ஆச்சரியம் தாங்கவில்லை. "தாலி இப்படியா இருக்கும்? தாலி மிகவும் மெல்லிதான நூலில்
அல்லவா இருக்கும்?" அவள் திகைப்பு நீங்காதவளாக கேட்டாள். "தாலியை முன்பு பனை
ஓலையிலும் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படி தாலியை நான்
இதுவரை கண்டது இல்லையே?" அவளின் கேள்வி தொடர்ந்தது. "இல்லை, இனிமேல் இதுதான் தாலி,
அது மட்டும் அல்ல, இனிமேல் இதை எல்லோரும் பார்க்கும் வண்ணம் தினமும் அணிந்திருக்க
வேண்டும், களற்றவே கூடாது" அவன் சொல்லிக் கொண்டே போனான். அவளுக்கு எதுவுமே
புரியவில்லை. தாலி என்பது திருமணத்தின் போது ஒரு அடையாளமாக கட்டப்படுகின்ற ஒன்று
என்று அவளுக்கு தெரியும். ஆனால் அதை எல்லோருக்கும் தெரிவது போன்று எந்த நேரமும்
அணிந்து கொண்டு இருப்பதில்லை. அதனால் அவன் சொல்வது எல்லாம் அவளுக்கு புரியாத
புதிராக இருந்தது. "பெண்களை காப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு, அவர்கள் திருமணமான
பெண்களை ஒன்றும் செய்ய மாட்டார்களாம், அதனால் எங்களுக்குள் பேசி அருமையான வழி
ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறோம், அதுதான் இந்தத் தாலி, இதுதான் இனி
பெண்களுக்கு வேலி" அவன் பெருமையாக அந்தப் புதுவகையான தாலிக்கான காரணதை சொன்னான்.
அடுத்த நாள் அவளைக் காணவில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. சில
மாதங்கள் கழித்து வேறொரு ஊருக்கு சென்று வந்தவர்கள் செய்தி சொன்னார்கள். அங்கு ஒரு
தாடிக்காரனுடன் அவள் சிரித்துப் பேசியபடி ஒன்றாக குதிரையில் போவதை அவர்கள்
கண்டார்களாம்.
- வி.சபேசன்
தலை நிமிர்ந்து
பார்க்காதவள்!
அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள்.
அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவ