ஒரு அமெரிக்க வீரனுக்கு ....!

 

ஓ வீரனே
தபாலிலே வந்திருக்கிறதா
உனது குழந்தையின்
முத்தங்கள்.
மெத்தச் சந்தோசத்தோடு
வாங்கிக் கொள் …

ஆனால்
உன் தூப்பாக்கி
எத்தனை குழந்தைகளின்
மழலைச் சத்தங்களை நிறுத்தியிருக்குமோ .. ?

உனது மனைவியின்
வெப்பம் நிறைந்த
ஏக்கப் பெருமூச்சுகளை
எப்படி அறியப் போகிறாய் ... ?

நிறைவேறாத
குறிக்கோளுக்காகவே
நீ கொதிக்கும் வெயிலிலே
நிற்கிறாய்.

வெள்ளை மாளிகையின்
குளிர் அறையிலே
உனது எசமான்..

இரவல்
எண்ணை வயலுக்காகவே
நீ பாலைவனத்திலே எரிகிறாய் …!

உனது தேசக் கொடி
பறப்பது
அப்பாவிகளின் மண்டை ஓடுகளிலே
என்பது கூட
அறியாமலே
மரண பயத்தோடு
உனது வாழ்கை
கரைகிறது…!

                            -        மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

மண்ணுக்கும் தெரியாது
போட்டானே அத்திவாரம் ….!

 

உரு மறைந்திருந்த

ஒரு வீரனை
இழந்திருக்கிறது தமிழினம்

புலத்திலிருந்தபடியே
களத்திற்க்காக
கலகம் செய்தவன் இவன்

வலுவிழந்து இயங்காததை
கரை நோக்கி விடும்
கடல்
என்பதனாலே
பதினைந்து வருடங்களுக்கு மேலாக புயலாக
இயங்கினாய்
ஒரு கண்டத்தையே பொறுப்பேற்று …

அதனாலே
பல கண்டங்களையும்
கண்டவன்…

வீரியமானவன்
அத்தோடு
வீரமானவன்
இவனைப் பற்றி
எமக்குத் தெரியாதது கூட
எதிரி அறிந்திருந்தான்..!

விடுதலைப் போரையும்
பார்த்தீபன் ஓட்டிய தேரையும்
பின் பற்றியவன்.

அதற்காகவே
விடுதலைத் தீயை தன்னுள்ளே
பற்றியவன்

உனைப்பற்றி
பலருக்கு அடியும் தெரியாது
நுனியும் தெரியாது
அளந்திட முடியுமா
உனது
பணியின் நீளம். …?

நீ போட்டாய்
மண்ணுக்கும் தெரியாமலே
ஒரு அத்திவாரம்

அதன் மேலேயே
கட்டப்படுகிறது
விடுதலைக்கான கோபுரம்
அதிலே நீ
உச்சத்திலே வழி காட்டும்
ஒளியாவாய்
விடுதலை பெற்றவரை
வருடிச் செல்லும் வளியாவாய் ...!

 

                                 -  மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

எமை விட்டு  விரைவாக ஏன் போனான்?


இடி வீழ்ந்து போன
எள்ளுச் செடியாயினர்
உன் சாவு அறிந்து அனைவரும்

வந்து நிறைக்க முடியாதே

உன் இடத்தை
இனி எந்த முனைவரும் ...!

பெயர் மட்டும் தானே
பாலசிங்கம்

கொண்ட கொள்கையிலே
இவன் ஒரு
பாயும் புலியின் அங்கம்

முதன் முதலிலே
தமிழனுக்காகப்
பேசினாய் திம்பிலே

பிடிக்காத
சில வல்லரசுகளாலே
சிக்கினாய் பெரும் வம்பிலே

விமோசனம் கிட்டாதா
தமிழனுக்கு என
படுக்கையிலே விழ்ந்த போதும்
வாடினாய்

அந்த ஆசை
நிறை வேறு முன்னே
விழிகளை ஏன் மூடினாய் ..?

திருக்குறளுக்கு
விளக்கம் கொடுப்பது போலிருக்கும்
மாவீரர் நாளிலே
நீ கொடுக்கும் விளக்கம்

எல்லோரின் சந்தேகத்தையும்
அறவே
அது விலக்கும்

எந்தப் பகைவரையும்
அவ் விளக்கம்
நிச்சயமாகவே
கலக்கும்

போய் விட்டானே
கார்ல்மாரக்ஸ் என வந்த
ஈழத்து ஞானி …

ஆயுதப் போருக்கும்
நீ தானே
அரசியல் முகம் தந்த ஏணி

தவணை முறையிலே
சா வந்த போதும்
காலனையே காத்திருக்கச் சொன்னவன்

எவர் வந் போதும்
பேச்சுவாரத்தை மேசையிலே
நீ தானே
மன்னவன் …!

உலகிற்கோ
தமிழீழ தேசத்தின்
குரல் ஆனான்

ஆயினும்
எமை விட்டு
விரைவாக ஏன் போனான்?


                             -  மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

கண்டுணர்! 

அண்டமெங்கும்
ஆண்டவெங்கள்
தண்டமிழை
நண்டெழுத்து ஆள
உண்டுடுத்து வாழ்வதோ?

கண்டமெங்கும்
கண்டவெங்கள்
வண்டமிழர் கூட்டம்
கண்டவர்க்கும் காலமெலாம்
தொண்டு செய்து சாவதோ?

இதை
கண்டுணர்ந்து
தண்டெடுத்து
குண்டெடுத்து ஈழமதை
கொண்டு வந்தால்
பண்டுலகர் போற்றுவர் - இல்லை
விண்டவரும் தூற்றுவர்!
 

                                 - வி.சபேசன் (17.11.06)

 


 

மனிதத்தின் மைந்தர்! 

என்      

கைகள்
இரண்டிலும்
கட்டு....

விழிகளில்
கண்ணீர்
சொட்டு....

கெஞ்சிறேன்
உனை நான்
கேட்டு....

புலியே
வந்தெனக்கு
ஊட்டு...
எந்தன்
கடமைகள்
யாவையும்
தொட்டு....

செய்கிறாய்
இனப்பாகு
விட்டு...

மனிதத்தை
நெஞ்சதில்
கூட்டி....

செய்கிறாய்
பணியதை
சுட்டி....

உன்னையா
வந்தேன்
நான்
கொல்ல....???

இந்த
உணர்வதை
எங்கே
நான்
சொல்ல....???

வெறியதை
ஊட்டியே
வளர்த்தார்....

உன்னை
கொல்லவே
எம்மையும்
வைத்தார்.....

உம்மை
பார்த்ததும்
இன்றே
அறிந்தேன்...

மனிதத்தை
இன்றே
உணர்ந்தேன்....

உன்மையில்
நீங்கள்
புனிதர்....

இந்த
மண்ணின்
மனிதத்தின்
மைந்தர்....

                          - வன்னிமைந்தன் (ஹொலண்ட்)

 


 

 

மீட்டுத் தருமா???

 

இந்திய மண்ணின் மானத்தைக் காக்க
கார்கிலுக்குப் புறப்பட்டான்
காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன்
தடுத்தான் அவனது தம்பி
இனமான இளவேள்
அண்ணா! நீ புரியும் போர்
மீட்டுத் தருமா
நம் தமிழர் இழந்த
தேவிகுளம், பீர்மேடு,
வேங்கட மலை, கோலார் தங்கவயல்
கச்ச தீவு போன்றவற்றை
ஏன் நம்மின மக்களின்
காவிரியாற்று நீரையாவது
சிந்திக்கத் தொடங்கினான்
கார்கில் வீரன்.

 

                                     - இளங்கோ (இலண்டன்)

 


 

 

வாளை எடுக்கட்டும் கரங்கள்!

 

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான்
கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான்
வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை
புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை

தமிழன் நெற்றியில் நீறை அணிந்தான்
அன்றே போரில் தேரை இழந்தான்
பின்பு மெதுவாய் பேரையும் இழந்தான்
இன்று மொத்தமாய் வேரையே இழந்தான்

வீரிய தமிழனை வீழ்த்திய மந்திரங்கள்
ஆரிய பார்ப்பான் செய்திட்ட தந்திரங்கள்
கூப்பிய கைகள் கொண்டவர் மரங்கள்
கூரிய வாளை எடுக்கட்டும் கரங்கள்

    

                                                          -வி.சபேசன் (14.03.06)

 


 

கோவில்

வண்ணப் பட்டாடை உடுத்திய
வண்ணச் சிட்டுக்கள்
வட்டமிடத்துடிக்கும்
வரி வரியாய்க் காளையர்கள்
நகைக் கடையே கொலுமடமாய்
நங்கையர்கள் நானுறு பேர்
நன்றாக நோட்டமிடும்
நாலைந்து திருடர் கும்பல்
கள்ளுக் குடித்தவர்போல்
கலையாடும் காவடிகள்
காண அழகுப் பெண்கள் வந்தால்
காவடியில் வேகம் கூடும்
அன்று பார்த்த திரைப் படத்தை
அழகழகாய் சொல்லிடுவார்
ஆண்கள் கொஞ்சம் கூடிவிட்டால்
அரசியலும் சேர்ந்து விடும்
கோவில் என்றால் பக்தி என்பர் - அங்கோ
நாதியற்று நிற்கின்றார் கடவுள்!

 

                            - இளங்கோ (இலண்டன்)

 


 

அகவை 51 இற்கு வாழ்த்து

 

வருமீழ விடிவிற்காய்
திருவான வடிவொன்று
பெருமானத் தமிழொன்று
உருவான நாளின்று

காத்தருள வேண்டுமென்று
காத்திருந்த ஈழ மண்ணில்
கார்த்திகை மாதந்தன்னில்
மீட்பராய் ஒரு தலைவன்
வந்துதித்த நாளின்று

இன்று இத் திருநாளில்
கொன்றழித்த பகையெல்லாம் 
வீழ்த்தி வென்ற ஐயனை
வாழ்த்தி வணங்கிப் போற்றிடுவோம்

 

- வி.சபேசன் (26.11.05)

 


 

 

 

 

 

 

என்ன செய்ய??!!

பூக்களை தருவதற்காய்
நான் வந்து கொண்டிருக்கிறேன்

மாட்டுவண்டி ஒன்றிலே
கரடு முரடான பாதையிலே
மெது மெதுவாய் வந்து கொண்டிருக்கிறேன்

கண்ணைப் பறிக்கும்
வண்ணம் கொண்ட
சொகுசுக் காரிலே
எனக்குப் போட்டியாக
அவர்களும் வருகிறார்கள்

வாண வேடிக்கைகள் முழங்க
சுவரெல்லாம் செய்திகள் சொல்ல
ஆடம்பரமாய்
அவர்கள் வருகிறார்கள்

நான் தருவதற்கு
பூக்களை கொண்டு வருகிறேன்
அவர்கள் விற்பதற்கு
மலத்தைக் கொண்டு வருகிறார்கள்

மக்கள் எல்லோரும்
காரை நோக்கியே
கட்டுக்கடங்காமல் ஓடி வருகிறார்கள்

ஓடி வந்து
தங்கத் தாம்பாளத்தில்
வைத்து அவர்கள் கொடுத்ததை
சந்தோசமாய் வாங்கிச் செல்கிறார்கள்

என்னையும் பூக்களையும் சீண்டுவார்தான்
யாருமில்லை
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
வேறு கார்களும் என்னை முந்திச்
செல்கின்றன

சுற்று முற்றும் பார்க்கிறேன்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
பீக்களை மொய்க்கும்
ஈக்களே தெரிகின்றன

இனி இந்தப் பூக்களை
நான் என்ன செய்ய??!!
                                              - வி.சபேசன்

 


 

கொடி ஏற்றத்துக்கே  ஆடிப் போனார்கள்…!

நவாலி
நாகர் கோவில்
செஞ்சோலை என்று
நீங்கள் போட்ட இரத்தக் கோலங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது
தமிழனின் விமானம்.

இலக்குகள்
தவறுகின்ற போது மட்டுமே
எங்கள்
உயிர் பிழைக்கிறது
ஏன் எனில்
அரச படைகளின் இலக்குகளே
மக்கள் தானே …!

தமிழன் விமானம்
வானத்திலே பறக்கும் போதெல்லாம்
கூடவே பறக்கிறதாம் சிங்களவரின்
மானம் …

தமிழர் வான்படை மீது
சிலருக்கு சந்தேகமாம்
கப்பல்
ஓட்டிய தமிழனின் பேரன்
விமானம் ஓட்ட மாட்டானா
என்ன …?

இலங்கை
ஒரு சொர்க்க நாடென
விமானம் ஏறும் பயணிகளே கவனிக்க
சிலவேளை அங்கே
மோட்சமும் கிட்டலாம் என்பதையும்
கவனத்திலே வைக்க …!

கொடி ஏற்றத்துக்கே
ஆடிப் போன அரசு
கடைசித் திரு விழாவுக்கு
என்ன செய்யுமோ …?
                                           -  மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

முட்கடிதம்!

 

இது தானே உண்மை ....!
இரத்தத்தால்
மெழுகப்படுகிறது எங்கள்
நிலம் ...

முட்கிரீடங்களாலே
அலங்கரிக்கப்படுகின்றன.
எங்கள் தலைகள் .!

கண்ணீர்த்
துளிகளால் மாலை
நெய்வதே எமது அன்றாட வேலை.

இந்த எச்சங்களே
வரலாற்றிலே எமக்கான
மிச்சங்களாகும்.

கடல் போல
வார்த்தைகளைக் கொண்ட தமிழிலே
எந்தச் சொல்லை
எடுத்து
எமது வலியை சொல்லிட ..!

இலங்கை மண்ணின்
ஒவ்வொரு துகழும்
எங்கள்
குருதியாலே கழுவப்படுகிறபோதும்

வியாபாரம் பாழாகிவிடும்
என்பதனாலே
மௌனத்திரை விலக்க
யாருமே முன்வருவதில்லை ...

 

 

                                            -  மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

விடுதலையின் பல்லவிகளுக்கான கவிதை ….!

நடு நிசியிலே                   

ஒரு பேரொளி நாள் …


எண்ணத்திலே
வாழும் குழந்தைகளின்
நினைவுகளை
உரசிப் பார்க்கும் கணம்.

கைகள் ஏந்தும் வெளிச்சத்திலே
கால்கள்
காத்திருக்கும்
உங்களின் வரவுக்காக …!

ஆயிரம் தாரகை
வாசலிலே விளக்கேற்றும்
வானம் மழைப் பூக்களைத் தூவிட
வரம் கேட்கும்

தொட்டுத்
தழுவத்துடிக்கும் அற்புதமானவரின்
கீதம் காதோரம் பேசும்

கட்டுக் கடங்காமல்
கண்ணீர்
உடைக்கும்

வாழ்ந்த காலங்களை
அசைபோடும்
மனசு

நிறைவேறும்
கனவுகளை சொல்லவே
வந்திருக்கிறோம்

எங்கள்
விடுதலைப் பாடலின் பல்லவிகளே
இது உங்களுக்கான நேரம் …!

                                                   -  மட்டுவில் ஞானக்குமாரன்

 


 

எந்த விருது வந்துனைக் காக்கும்...! 

புரியாத பொருட்களில்

ஒன்றாகவே
உலகம் எனக்கு...


குருவிச்சை மரத்துக்கு
கடின உழைப்பாளிக்கான
மரியாதையும்

நுளம்புக்கோ
சமூக சேவையாளனுக்கான விருதுகளும்
என்றாகும்போது
வேறென்ன தோன்றும்..?

கொள்ளைக்காரனுக்கு
பீதாம்பரம் போர்தப்படும் போது தானே
கொலைகாரனுக்கு
செங்கம்பளம் விரிக்கப்படும்.

இந்த
சமன்பாட்டை
நிருபிக்கவா இப்படி ஒரு ஏற்ப்பாடு...?

ஆனாலும் ஒன்று
நோபல் பரிசை வென்றவனையே
குற்றவாளிக் கூண்டிலே
ஏற்றியிருக்கிறது
வரலாறு....

மனங்களை
வென்றவனுக்குத் தானே விருது
மனங்களை
கொன்றவனுக்கு பொருந்துமா ...?


போகட்டும்
மக்களின் மன அரங்கிலே
தூக்குக் காத்திருக்கும்போது
எந்த விருது வந்து தான் என்ன ...?

மனச் சாட்சியே
வந்துனைத் தாக்கும்
அது இருந்தால்....?

                                                           - மட்டுவில் ஞானக்குமாரன

 


 

இராவணனின் புதிய தம்பி …! 
 

இங்கே ஒரு போர்க்
குதிரை
செக்கிழுக்கிறது

வாளேந்திய
கைகளிலே
வளையல்கள் அலங்கரிக்கின்றன

சோழன்
படையிலே ஒரு வீரன்
கோழையாக மாறினான்

மாலையிலே
சேர்ந்த பூவொன்று
சாக்கடையோடு உறவு கொண்டது

போர்க்களத்திலே
பூப்பறிக்க
எண்ணிக் கொண்டான் ஒரு மறவன்

ஆண் ஒருவன்
தன்னை ஒரு அரவாணியாக
அலங்கரித்துக் கொண்டான்

இது
புலி வேடம் பூண்ட எலி
என்பதை காலம் காட்டித் தந்தது


                 -  மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)

 


 

 

எதற்காக தடுத்துக்கொண்டே இருக்கிறாய்...!

வெதுபகத்து
அக்கினிக் குண்டங்கள் போலவே
வெப்பத்தை அள்ளி வீசுகிறது
நெஞ்சக் கூடு...

இந்தச்
செடிகளுக்கு
காற்றே மறுக்கப்படுகிற போது
நீர் கிடைக்குமா...?

பாலஸ்தீனமதின்
முடிவுறாத
பங்குப் போர் போலவே
வாழும் உரிமை மறுக்கப்படுகிறது
பிறந்த மண்ணிலே

காந்தி
பேசிய மொழியையும்
கதர்சட்டை நெறியையும்
வெள்ளையன் புரிந்து கொண்டதாலே
சுதந்திரத்தை வழங்கினான்

ஆனால்
இலங்கைத் தீவுச் சண்டியருக்கோ
இந்த மொழி
புரியவில்லையே ...?

கடிக்க வந்த பாம்பை
அடிப்பதை தவிர
வேறு வழியே இல்லாத போது
தடி எடுத்ததையே
தவறென்று தீர்மானம் நிறைவேற்றுவதா ...?

அதனை
தட்டிக் கேட்கவும்
தெ
ளிவுபடுத்தவும் வேண்டிய
தாய் நாடும்
வேடிக்கை பார்க்கிறது

சீனாவுக்கும்
பாரதத்திற்க்கும் போர் என்றானபோது
பாரதமே
உனக்கு உதவியாய் படை
அனுப்பக் காத்திருந்தோமே
எமக்காகவா
பாடை கட்ட நாள் பார்க்கிறாய் ...!

     - மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)

 

 


 

 

ஈகச் சுடர் திலீபன் அண்ணா நினைவாக! 

 

தலைவனவன் பாதையிலே தளம் அமைத்து நின்றாய்
தமிழீழ விடுதலையைத் தனி மூச்சாய்க் கொண்டாய்
களங்கள் பல கண்ட மறப் படையில் சேர்ந்தாய்
கனிவு மொழிச் சொல்லால் எமது மனங்களை நீ ஈர்த்தாய்
அமைதி காக்க வந்த படை அழிவுகளைச் செய்ய
அறவழியின் பாதையிலே புதிய களம் கண்டாய்
அன்னை மண்ணைக் காக்க உண்ணா நோன்புற்று
அண்ணல் காந்தியை விஞ்சி நின்ற மாந்தன் ஆனாய்
மடைதிறந்த வெள்ளம் போல் நாவன்மை உடையாய்
மாந்தமிழர் உரிமைக்கு பெரும் துணையாய் இருந்தாய்
மாக்களைப் போல் நாம் வாழாமல் மானுடராய் வாழ
மதிப்புமிகு உன் உயிரை மண்ணுக்கு நீ தந்தாய்
காந்தியத்தின் பாதையிலே பயணம் செய்த உன்னை
காலனவன் கைகளிலே போட்டுவிட்டுச் சென்றார்
காவியமாய் நம் மனத்தில் நிலைத்து விட்ட உன்னை
காலம் பல சென்றாலும் நாம் மறவோம் என்றும்
உண்ணாமல் உயிர் துறந்த உயர்ந்தோன் நீ
உரு இழந்து ஒளி தந்த மெழுகுத்திரி
தளராமல் தடம் போட்ட தவப் புதல்வன்
தமிழர் நெஞ்சில் தணியாத ஈகச் சுடர்.

                           

                                                     - இளங்கோ (இலண்டன்)

 


 

காகங்களே! மேகங்களே!...

காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது
மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது
ஆயினும் காகங்களே! மேகங்களே!
குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும்
நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும்
அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை
இதோ, அவைகள் வெளிக்கிளம்பி விட்டன
ஆகவே காகங்களே! மேகங்களே!
கூவுகின்ற ஆவலையும்
வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும்
விட்டு
கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்

 

 - வி.சபேசன் (10.01.06)