தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 2)
- இளங்கோ (இலண்டன்)

 

மிகப் பெரிய செல்வாக்குடன் வாழ்ந்த சமணம் இன்று தமிழகத்தில் அற்ப சொற்ப எச்சங்களுடன்தான் எஞ்சி நிற்கின்றது. ஈழத்தில் அதுவும் இல்லை. இதன் மாபெரும் வீழ்சிக்கு என்ன காரணம்?

நடைமுறை வாழ்விற்கு சற்றும் பொருந்தாத கடுமையான துறவறத்தை வலியுறுத்தியதுதான் காரணம் என பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. சமணம் இல்லறத்தை துறவறத்திற்கு இணையாக சேர்த்துப் போற்றிய ஒரு மார்க்கம். அ.மார்க்ஸ், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்களின் கருத்துப்படி வள்ளுவரை ஒரு சமணராகக் கருதுவோமானால் அவரது காமத்துப்பாலானது கண்களால் ஏற்படும் பார்வை மயக்கத்திலிருந்து உடலால் ஏற்படும் கலவி மயக்கம் வரை இல்லற வாழ்வின் எந்த சுகத்தையுமே விட்டு வைக்கவில்லை.

திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியானது காதல் இன்பம் சொட்டும் ஒரு காவியம். அது உள இன்பத்தை மட்டும் விளக்கவில்லை உடல் இன்பத்தையும் சேர்த்துத்தான் விளக்குகிறது. சமணத் துறவிகள் வெள்ளாடை அணிந்து வந்தனர். அவர்களிலும் மிகக் குறிப்பிட்ட சிலரே துறவறத்தின் அதி உச்ச நிலையாக, ஆடைகூட மிகை என அதனையும் துறந்தனர். நமது தமிழ்ப் புலவர்களான இளங்கோவடிகள், திருத்தக்கதேவர், பவணந்தி முனிவர் போன்றவர்கள் அப்படி ஓர் அதி உச்சத் துறவை மேற்கொண்டார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மற்றும்படி சமணத்தைத் தழுவியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் துறவே சரணம் என்று வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. திருமணம் முடித்து குடும்பம், குழந்தைகள், காதல், பாசம், ஆடல், பாடல் என வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துச் சென்றவர்கள்தாம்.

அப்படியானால் சமணத்தின் வீழ்ச்சிக்கு என்னதான் காரணம்? அது திட்டமிட்டு அழிக்கப் பட்டது என்பதுதான் உண்மை. அந்த அழிப்புப் படலங்கள்தான் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளன. சைவத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்காக சமணத்தைத் தழுவியிருந்த எண்ணாயிரம் தமிழர்கள் துடிக்கத் துடிக்க கழுவில் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப் பட்டனர். சமணர்கள் மட்டுமல்ல அவர்களது இலக்கியக் கருவூலங்கள் அனல் புனல் வாதம் என்ற பெயரில் அழித்தொழிக்கப் பட்டன. இவை பெரிய புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள். அவற்றுள் குறிப்பிடப்படாமல் துடைத்துத் தள்ளப்பட்ட சமணர்களும் அவர்களின் இலக்கியங்களும் ஏராளம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நாலடியார் போன்றவைகள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம்.

சமணப் பள்ளிகள் இடிக்கப் பட்டன, அவர்களது நிலபுலன்கள் கவரப்பட்டன, யானைகளைக் கொண்டு அவர்களது தலைகள் இடறப்பட்டன. சமணத்தை அழிப்பதற்கு சைவம் எவ்வாறு ஆவேசத்துடன் இருந்திருக்கிறது என்பதை சைவ அடியார்களின் பதிகங்களே நமக்கு சான்று தருகின்றன.

‘பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணற் கற்பழிக்கத் திருவுளமே’ – திருஞான சம்பந்தர்
 

“அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் சிரங்களை சிந்தவாது செயத் திருவுள்ளமே" – திருஞான சம்பந்தர்

“குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண சாக்கிப்பேய்’’ – சுந்தர மூர்த்தி நாயனார்

“புலையறம் பேசும் புத்த சமணர்களின் தலையறுக்க வேண்டி நின் தாழ் பணிந்தேனே” – சேக்கிழார்

“விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சகச் சாளுக்கியர்” – மாணிக்கவாசகர்

சமணத்தின் மீது சைவம் காட்டிய இத்தகைய காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம்? சமணம் வேதங்களையும் யாகங்களையும் அடியோடு மறுத்துரைத்ததுதான் காரணம். அப்படி மறுத்துரைப்பதற்கு அவைகளில் என்னதான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவற்றுள்தான் எல்லாமே இருக்கிறது. வேதங்கள் பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தன, உழைக்கும் மக்களை உதறித்தள்ளி உழைக்காமல் பூணூலையும் தர்ப்பைப் புல்லையும் காவித்திரியும் கூட்டத்திற்கு முழு உரிமைகளையும் அளித்தன. யாகங்களில் வளர்க்கப்படும் ஓமத்தீயில் உயிர்கள் வெட்டிப் பலியிடப் பட்டன. சைவம் இவைகளை ஏற்றுக் கொண்டது. சமணம் இவைகளைக் கண்டித்தது. இந்த ஒரு காரணத்திற்காகத்தான் சமணம் துடைத்துத் தள்ளப்பட்டது.

சமணம் ஒருவேளை தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்திருக்குமேயானால் அது கற்பித்த சமத்துவத்தின் விளைவாக தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லாமல் போயிருந்திருக்கக் கூடும். ஏனெனில் சுமார் 14 நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணில் தழைத்தோங்கியிருக்கும் சைவம் சாதியத்திற்கு எதிராக எந்த விதிகளையும் வகுக்கவில்லை. பிறவி ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பனியத்தை அது ஏற்றுக் கொண்டது. ஆதனால்தான் இந்து மதம் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழி வகுத்தது போல் சைவமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. சைவம் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் சைவமும்; வேதமதமாகிய இந்து மதமும் ஒன்றென்றோ அல்லது வரலாற்று அடிப்படையில் இரண்டிற்கும் தொடர்பு உண்டு என்றோ கூறமுடியாது. வேதமதத்தை எதிர்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் சைவம் எதிர்த்ததால் அதுவும் இந்து மதத்தின் பிரிவுகளில் ஒன்று என்று கதை கட்டி விடப் பட்டது. பின்னாள்களில் அதற்கு ஏற்றவாறு புராணக் கதைகளும் புனைந்து விடப்பட்டன.

என்னதான் சைவம் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டாலும் பார்ப்பன மேலாதிக்கமானது சைவத் திருமுறைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் தமிழன் கட்டிய கோவில்களில் தமிழனின் தாய் மொழியை புறந்தள்ளி புரியாத மொழியான சமஸ்கிருதத்தில் பூசை செய்யும் அவலம் தொடர்கின்றது. சைவம் பார்ப்பனியத்தையும் பிறவி ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான் என்பதை தமிழறிஞரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பலோட்டியவருமான வ.உ.சிதம்பரனார் அவர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார். வ.உ.சி. பின்வருமாறு கூறுகிறார்.

“எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. நமக்கு கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார். அதனைகொண்டு ஆராய்வோம்… கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான்….. பெரியபுராணத்தில் கூறப்படும் மனுஸ்மிருதி இப்பொழுது உள்ளதுதான் எனக்கூறினால் சேக்கிழாருக்கும் பிராமணருக்கும் சம்பந்தம்முண்டென்று கூறுவதைத் தவிர வேறென்ன செய்வது? வேதத்தில் பிழைகள் இருக்கலாம் திருத்தவேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான்”

வ.உ.சி நாத்திகரல்ல சைவப் பராம்பரியத்திலிருந்து வந்தவர்தான். சைவத்தின் குறைகளை அவரும் வெளிக்காட்டியுள்ளார்.

சைவம் உயிர்க் கொலைகளை அன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறியும்போது நம்மில் பலர் அதிர்ச்சி அடையவே செய்வார்கள் ஏனெனில் இன்றைய காலத்தில் சைவம் என்றால் அது மச்சம் மாமிசம் தவிர்த்த ஒன்றாகவே கருதப்படுகிறது. புலாலை கடுமையாக மறுக்கும் ஒன்றாகவே அது இன்று காட்டப்பட்டு வருகிறது. சைவத்திற்குள் இந்த மறுமலர்ச்சி எப்படி ஏற்பட்டது?

சமணத்தின்மீது சைவம் மேற்கொண்ட கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து சமணத்தைத் தழுவியிருந்த பல தமிழர்கள் சைவர்களாக மாறினர். இருப்பினும் அவர்கள் சமணக் கொள்கைகளைக் கைவிடவில்லை. அந்தக் கொள்கைகள் நாளடைவில் சைவத்திற்குள் புகுந்தன. மிகைப் படுத்தப் பட்ட செய்தியாகத் தோன்றினாலும் அதுதான் உண்மை. ஏனெனில் சங்க காலத்தில் தமிழர்களால் வணங்கப் பட்ட முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவைகள் உணவாகப் படைக்கப் பட்டுள்ளன என்பதை சங்க இலக்கியங்களே எடுத்துக் காட்டுகின்றன. ஊன் உண்ணாமை என்பது சமணம் வகுத்த கொள்கையே. கொல்லாமை என்பது பௌத்தம் மற்றும் சமணத்தின் உயிர் நாடிக் கோட்பாடுகள். அதிலும் கொல்லாமையோடு சேர்த்து ஊன் உண்ணாமையையும் மிக அதிகமாக வலியுறுத்தியது சமணம் மட்டுமே. மேலும் பௌத்தத்தைக் காட்டிலும் சமணம் பல ஆண்டுகள் தொன்மையானது. இதிலிருந்து இந்தக் கோட்பாடானது சமணம் கற்பித்த ஒன்றுதான் என்பது தெளிவாகிறது.

மேலும் ஒரு உண்மையை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. காய்கறி உணவானது சமணம் செழிப்புற்றிருந்த காலத்தில் சைவ உணவு என அழைக்கப் படவில்லை. அப்போது மரக்கறி உணவானது ஆருகத உணவு என்றே அழைக்கப் பட்டது. இந்த ஆருகதம் எனப்படுவது சமணத்தின் மற்றுமொரு பெயர் ஆகும். சைவ இலக்கியங்கள் சமணர்களை அருகர் எனப் பழித்ததும் இதே பொருளில்தான். இதே மரக்கறி உணவை இன்றும் ஒரு சிலர் ஆராத உணவு என்று அழைப்பதை நாம் அறியலாம். இது ஆருகாதம் என்பதின் திரிபேயாகும்.

இவ்வாறு தமிழர் வாழ்வில் அவர்தம் கல்வி, இலக்கியம், பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் சமணத்தின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

சைவம்தான் தமிழரின் சமயம் என்று ஆண்டாண்டு காலம் கூறி வந்த கருத்தை மறுத்துரைப்பதால் சமணம்தான் தமிழரின் சமயம் என நாம்; இங்கு கூற வரவில்லை. தமிழரின் அடையாளத்தை நாம் சமயத்தோடு பிணைத்து விடக் கூடாது என்பதைதான் இங்கு எடுத்து இயம்புகின்றோம். தமிழர்களுக்குத் தமிழ்தான் அடையாளம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமயத்தை அவர்கள் பின் பற்றி இருக்கிறார்கள். அவ்வாறு பின் பற்றிய சமயங்களில் சமணத்தின் பங்கு போற்றுதலுக்குரியது.
 

 

........................