தமிழை வளர்த்தது சைவமா? சமணமா? (பாகம் 1)
- இளங்கோ (இலண்டன்)
அப்போது எனக்கு சுமார் ஏழு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். சைவ சமயப்
பாடப்புத்தகத்தில் வரும் கதைகளை விரும்பிப் படிப்பது வழக்கம். அதுவும் வீட்டில்
உள்ள வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு முன் அவற்றைப் படித்துக் கட்டுவதில் சற்று
கூடுதல் விருப்பம். ஏனெனில் பாடப் புத்தகங்களில் இல்லாத சைவம் தொடர்பான மேலதிகக்
கதைகளை அவர்கள் சுவைபடச் சொல்லுவார்கள்.
ஒரு
நாள் வீட்டிலிருந்த எனது உறவினர் ஒருவரிடம் அவ்வாறு படித்துக்காட்டிக்
கொண்டிருந்தேன். அவரும் சைவத்தைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது
நான் சைவ சமயம் நல்ல சமயம் என்றால் கெட்ட சமயம் எது தாத்தா என கேட்டேன். அவர் சமணம்
என பதிலளித்தார். அவரது பதில் அந்த வயதில் எனக்குள் எந்த விதமான மாற்றுக்
கருத்தையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இன்று அவர் போன்றவர்களால் தூற்றப்
பட்ட சமணம் எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை தமிழர்களுக்கு கற்பித்திருக்கிறது என்பதனை
நினைத்துப் பார்க்கிறேன்.
நம்மில் பலர் பக்தி, சமயநம்பிக்கை போன்ற வட்டத்திற்குள் வாழ்பவர்கள். பக்தியும்
சமயநம்பிக்கையம் உணர்ச்சியின் பாற்பட்டவை. அதன் விளைவாக தன் சமயமே சிறந்தது என்ற
கருத்தும் அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்களின் சமய நூல்களில் கூறப்பட்டவைகளை
எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அனைத்து
சமயத்தினருக்கும் இது பொருந்தும். சமய நூல்கள் மீது விமர்சனங்களை வைத்தால் சீறி
விழுவார்கள். அந்த அடிப்படைவாதம்தான் சகிப்புத்தன்மையற்ற வெறியாக ஒரு சிலருக்கு
மாறுகிறது. இந்த வட்டத்திற்குள்ளிருந்து விடுபட்டு சமயச் சார்பு அற்று, அறிவுத்
தளத்திலிருந்து நாம் சமயங்களை ஆராய்ந்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியும்.
நாம் தழுவியிருக்கும் சமயங்களில் உள்ள குறைபாடுகளும் நமக்கு புரியும். அப்படி ஒரு
தளத்திலிருந்து தமிழர் தழுவிய சமயங்களை ஆராய்ந்த போதுதான் ஒர் உண்மையைத் தெரிந்து
கொண்டேன்.
சைவமும் தமிழும் என்றும் சைவம்தான் தமிழை வளர்த்தது என்றும் நம்மில் பலர் பெருமையாக
முழங்குகின்றனர். தமிழின் இனிமையை மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள்
தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனால் அவர்களின் நோக்கம்
சைவத்தை உயர்த்தும் பொருட்டு இருந்ததேயன்றி தமிழை உயர்த்தும் பொருட்டு அல்ல.
உண்மையில் தமிழ் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியச் சிறப்பிற்கும் இலக்கணச் செழுமைக்கும்
சமணத்துறவிகள் ஆற்றிய பங்கு அளப் பெரியது. சமணர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின்
தனிச் சிறப்பிற்குக் காரணம் அவைகள் சைவ இலக்கியங்கள் போன்று தனிப்பட்ட சமய உயர்வை
வெளிக்காட்டமால் மொழி நலன், சமூக நலன் போன்றவற்றை வெளிக்காட்டி நிற்பதேயாகும். சமணம்
தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுக்கு முன் தமிழர்களின் சமயம் எது என்பதைப் பார்ப்போம்.
இதுதான் தமிழர்களின் சமயம் என்று நாம் எதனையும் வரையறுத்துக் கூறிவிட முடியாது.
ஒவ்வொரு கால கட்டத்திலிலும் அவர்கள் ஒவ்வொன்றை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான்
உண்மை.
கடவுள் மனிதனைப் படைத்தானா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். ஆனால்
இத்தனையாயிரம் கடவுள்களையும் மனிதன்தான் படைத்தான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள்
வாழ்ந்த மரபு, நாகரிகம், பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்களின் கடவுள்களும்
இருந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொண்டால்; அன்றைய சமூகம்
தாய்வழிச் சமூகமாக இருந்ததால் பெண்தெய்வ வழிபாடே முதன்மை வகித்தது. தமிழர்களின்
மிகத் தொன்மையான வழிபாடாக நாம் இதைக் கருதலாம். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இதையே
கொற்றவை எனக் குறிப்பிடுகின்றன.
இன்று நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையான நூலான
தொல்காப்பியத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
முருகன், கொற்றவை, திருமால், ஞாயிறு போன்ற தெய்வங்களை தமிழர் வழிபட்டனர் எனத்
தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால் அதில் சிவ வழிபாடு எந்த
இடத்திலும் இல்லை. தொல்காப்பியத்தில் உள்ள “சேயோன் மேய மைவரை உலக” என்ற வரியில்
வரும் சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் அந்த
வரி சிவனைக் குறிக்கவில்லை. அது முருகனைக் குறிப்பதாகாகும். முருகன் சிவனின்
மகன்தானே ஆதலால் அவரும் சைவக் கடவுள்தானே என சிலர் நினைக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல.
தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக்
குறிப்பிடுகிறது. அதில் குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில் வேட்டையாடுவது.
அவர்களின் தெய்வமாகவே முருகன் என்பவர் குறிப்பிடப் பட்டிருக்கிறார்.
பிற்காலத்தில் புனையப் பட்ட புராணங்கள் எங்கிருந்தோ வந்த வாதாபி கணபதிக்கு அவரை
தம்பியாக்கியது போல்தான் முருகன் சிவனுக்குப் பிள்ளையாக்கப்பட்டார். சிவனைப் பற்றிய
குறிப்புகள் முதன் முதலாக கடைச் சங்ககாலத்து நூல்களில்தான் குறிப்பிடப் படுகிறது.
இருப்பினும் அப்போது சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவம் என்ற பெயரில் ஒரு சமயம்
இயங்கவில்லை.
அடுத்து தமிழர் வழிபாடுகளில் நடுகல் வழிபாடு மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
களத்தில் வீரச் சாவை தழுவிக் கொண்ட மறவர்களின் நினைவாக நடுகல் நடும் வழிபாட்டையே
இது குறிக்கிறது. ஆனால் அந்த வழிபாடுகள் சமய மரபுகளாக அடையாளம் காணப்படவில்லை.
சங்க இலக்கியங்களை மிக நுணுக்கமாக ஆராயும் பொழுது பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான
மதுரைக் காஞ்சியில் கபாலிகம், வைதீகம், ஆசிவகம் என மூன்று வகையான சமயங்கள்
குறிப்பிடப் படுகின்றன. இதில் ஆசிவகம் எனப்படுவது தமிழர்கள் தழுவிய சமயங்களில் மிகத்
தொன்மையான சமயமாக கருதப் படுகிறது. ஆம் சைவத்தை தமிழர்கள் தழுவிக்கொள்ளும் முன்பே
ஆசிவகத்தை பெருவாரியான தமிழர்கள் தழுவிக்கொண்டு விட்டார்கள். கடவுள் மறுப்பு,
வருணாசிரம எதிர்ப்பு, வேத எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளைக் கொண்ட ஒன்றாகவே ஆசிவகம்
விளங்கியிருக்கிறது. ‘அண்ணலம் பெருந்தவத்து ஆசிவகம்’ என சிலப்பதிகாரமும் கூறுகிறது.
ஒரு காலத்தில் தமிழர்களால் போற்றித் தழுவப்பட்ட ஆசிவகம் இன்று அழிந்து போய்விட்டது.
தமிழர்களின் மதமாக வருணிக்கப் படும் சைவம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நிறுவனப்
படுத்தப் படுகிறது. பெருவாரியான தமிழர்கள் அதற்குப் பின்னர்தான் அதனைத் தழுவிக்
கொண்டார்கள். ஆசிவகத்திற்குப் பின்னும் சைவத்திற்கு முன்னும் இருந்த இடைப்பட்ட
காலத்தில் பெருவாரியான தமிழர்களால் தழுவப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த இரு
பெரும் சமயங்கள்தாம் பௌத்தமும் சமணமும். பௌத்தத்தையும் சமணத்தையும் பின்னாளில்
வந்தவர்கள் மதமாக வரித்துக் கொண்டாலும் உண்மையில் அவை மதங்கள் அல்ல. அவை கடவுளை
அடிப்படையாகக் கொள்ளாமல் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. வன்முறைக்கு எதிரானவை.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தமும் சமணமும் தமிழர்கள் மத்தியில் மிக வேகமாகப்
பரவியது. மணிமேகலை, குண்டலகேசி போன்றவைகள் தமிழில் தோன்றிய பௌத்த இலக்கியங்களே.
தமிழ்க் காப்பியமான மணிகேலைக்கு நிகரான ஒரு பௌத்த நெறிக் காப்பியம் வேறு எந்த
மொழிகளிலும் இல்லை எனலாம். பௌத்தத்தைக் காட்டிலும் தமிழோடு மிக அதிகமாக
தொடர்புற்றிருந்த ஒன்றாக சமணம் கருதப் படுகிறது. தமிழர்கள் மத்தியில் சைவம்
எழுச்சிபெறத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பார்த்தால் அதன் காலம் சுமார்
1400 ஆண்டுகள், ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தனிப்பெரும்
சமயமாக சமணம் விளங்கியிருக்கிறது. தமிழ் மொழிக்கு புது இரத்தம் பாய்ச்சியவர்கள்
சமணத் துறவிகளே. தமிழ் மொழியின் இலக்கணங்களை எல்லாம் வகுத்தவர்களும் அவர்கள்தாம்.
இன்று தமிழர்களால் போற்றப் படும் பெருவாரியான நூல்களைப் படைத்தவர்களும் அவர்களே.
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள்
போன்ற தமிழ் இலக்கிய கருவூலங்களில் சமணர்களின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. தமிழ்
தேசியக் காப்பியம் என பல தமிழறிஞர்களால் போற்றப் படும் சிலப்பதிகாரத்தை எழுதிய
இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி. அதே ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக
சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணத் துறவி. இன்று நாம் தமிழ் மொழிக்கு
எந்த இலக்கணத்தை பயன் படுத்துகிறோமோ நன்னூல் எனும் அந்த தமிழ் இலக்கண நூலை எழுதிய
பவணந்தி முனிவர் ஒரு சமணர். நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என திருக்குறளோடு
இணைத்துப் போற்றப் படும் நாலடியாரை எழுதிய நூற்றவரும் சமணத்துறவிகளே. ஐம்பெருங்
காப்பியங்களைப் போல் ஐஞ்சிறுங்காப்பியங்கள் தமிழில் உள்ளன அவையாவன உதயணகுமார காவியம்,
நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. இவை ஐந்தையும் படைத்தவர்கள்
சமணர்களே. மேலும் வளையாபதி, ஏலாதி, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், பெருங்கதை என
அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் பட்டியல் நீளுகின்றன.
இவ்வளவு ஏன் தமிழர்களின் மாபெரும் செல்வமான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர்
தழுவியிதும் சமணமாகத்தான் இருந்திருக்க முடியும் என தமிழாராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர். சென்ற நூற்றாண்டின் சிறந்த தமிழாராய்ச்சியாளர்களில் ஒருவரான எஸ்.
வையாபுரிப்பிள்ளை அவர்கள் வள்ளுவர் சமணரே என தனது ஆய்வுகளில் நிறுவியுள்ளார். அவரது
கருத்தை ஒட்டி சமகால கட்டுரையாளரும் தீவிர இடது சாரி முற்போக்காளராகக் கருதப் படும்
அ.மார்க்ஸ் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் வள்ளுவர் சமணரே என்பதை
அண்மையில் நிறுவியிருக்கின்றனர்.
சமணம் தமிழ் மண்ணில் தோன்றிய மார்க்கம் அல்ல. அது தோன்றியது வடநாட்டில்தான். ஆகையால்
தமிழ் இலக்கியங்களை படைத்தவர்களும் தமிழ் மண்ணிற்கு அந்நியமானவர்கள் என்று
நாயன்மாரல் விதைக்கப் பட்ட கருத்தை நம்புகிறவர்கள் இன்றும் உள்ளனர். சமணர்கள் வேறு
யாருமிலர் பச்சைத் தமிழர்களே! இன்னும் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அவதானிக்கலாம்.
சைவர்களால் படைக்கப் பட்ட இலக்கியங்களில் சமணத்திற்கு எதிரான காழ்புணர்ச்சி பல
இடங்களில் காணப் படுகிறது. பெரிய புராணத்தில் அது மிக அதிகமாகவே காணப் படுகிறது.
சமணத் துறவிகளிகளின் படைப்புக்களிலோ எந்த மதத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சிகளும்
இல்லை.
சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் சமயப் பொதுவுடமை அங்கே நிலவுகிறது. தன் சமயத்தை
புகழ்ந்து இன்னொரு சமயத்தை இகழும் தன்மை இளங்கோவடிகளிடத்தில் காணப்படவில்லை. சமண
சமயத்தைச் சேர்ந்;த கண்ணகிக்கு சைவ சமயத்தை சேர்ந்த சேரன் செங்குட்டுவன் சிலை
எழுப்பினான் அதிலும் தமிழைப் பழித்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை
போரிட்டு வென்று, இமயத்தில் இருந்து கல்லெடுத்து அதனை தமிழைப் பழித்த தருக்கர்களின்
தலையில் சுமக்க வைத்து கண்ணகிக்கு சிலை எழுப்பினான் என்ற செய்தியை இளங்கோவடிகள்
வருணிக்கும்போது சமய உணர்வுகள் பின் தள்ளப் பட்டு தமிழ் உணர்வே மேலோங்கி
நிற்கின்றது.
தேவாரம் திருவாசகம் போன்றவற்றை நாம் சைவ இலக்கியங்கள் என வகைப் படுத்த முடியும்.
ஆனால் சிலப்பதிகாரம், நன்னூல், சீவக சிந்தாமணி போன்ற நூல்களை நாம் சமண இலக்கியங்கள்
என வகைப் படுத்த முடியாது. அவற்றை சமண இலக்கியங்கள் என்று சொல்வதைக் காட்டிலும்
சமணத் துறவிகள் படைத்த தமிழ் இலக்கியங்கள் என்பதே சரியானது. சமணம் கற்பித்த அன்பு,
அறம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அவர்கள் தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தினாலும்
அவை சமூக நன்மையின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டிருக்கின்றனவே தவிர தனிப் பட்ட சமய
உயர்வைக் குறிக்கவில்லை.
சைவர்களின் இலக்கியங்கள் பக்தி மார்க்கத்திற்குள் முடங்கிவிட்டன. அறிவியல், அணுவியல்,
கணிதம், மருத்துவம் என சமணர்களின் இலக்கியங்கள் பல கூறுகளைத் தொட்டது. நீதியியல்
எனப் படும் புது இயல் அவர்களால்தான் தமிழுக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. புலால்
உண்ணுவதும் மது அருந்துவதும் பரத்தையர் தொடர்பும் சங்க இலக்கியங்களில்கூட கண்டிக்கப்
படவில்லை அவற்றைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் சமணத் துறவிகளே.
தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சமணத்தின் பங்கு அளப்பெரியது. பிறப்புக்கு ஒரு
நீதி என்ற வைதீக மதம் (இந்த வைதீக மதம்தான் பின்னாளில் இந்து மதமாக நீட்சி பெற்றது.)
கற்பித்த வேதாந்தங்களை மறுத்து கல்வியை அனைவருக்கும் சமமாக்கியவர்கள் அவர்களே. ஏழை
எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவதைப்போல் சமணத் துறவிகள் கல்வியையே தானமாக
வழங்கினார்கள். அச்சு இயந்திரம் இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதுவது
என்பது மிகக் கடினமாக பணியாகும். நேரமும் பொருளும் மிக அதிகமாக விரயமாகும்.
இருப்பினும் ஆயிரக்கணக்கான பிரதிகளை கைகளாலேயே எழுதி அவற்றை பலருக்கு தானமாக
வழங்கினார்கள்.
கல்வி
கற்கும் இடத்தை இன்றும் நாங்கள் பள்ளிக்கூடம் என்கிறோம் அந்தப் பள்ளி என்ற சொல்
சமணத் துறவிகள் தங்கியிருந்த மடமாகிய ‘பள்ளி’ என்பதில் இருந்து வந்த ஒன்றாகும்.
அதனைப்போன்று ஓளடததானமும் அவர்களால் வழங்கப்பட்டு வந்தது. தங்களது மடங்களில்
இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார்கள். இவ்வாறு தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய
செல்வாக்குடன் வாழ்ந்த சமணம் இன்று தமிழகத்தில் அற்ப சொற்ப எச்சங்களுடன்தான் எஞ்சி
நிற்கின்றது. ஈழத்தில் அதுவும் இல்லை. இதன் மாபெரும் வீழ்சிக்கு என்ன காரணம்?
தொடரும்..........