மடுவை நெருங்கும் சிங்களம்

 

மடுவை கைப்பற்றும் நோக்கில் ஒரு வருடமாக முயன்று வரும் சிறிலங்காப் படையினர் தற்பொழுது மடுவை நெருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிறிலங்காப் படையினர் மடு தேவாலயத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளார்கள்.

மடு தேவாலயம் பழமை வாய்ந்த ஒரு தலம். தொடரும் போரில் மக்களின் புகலிடமாக பல ஆண்டுகளாக விளங்கி வந்தது. தற்பொழுது அப் பகுதி வெறிச்சோடிப் போய் காணப்படுகிறது. மடு தேவாலயத்தின் மத குருமார்கள், பணியாளர்கள், மடு மாதா உட்பட அனைவரும் நேற்றோடு வெளியேறி விட்டார்கள்.

மடு தேவாலயப் பகுதியை ஒரு சமாதான வலயாமாக்கும்படி பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு அக் கோரிக்கையை வலியுறுத்தி 5000இற்கும் மேற்பட்ட மக்கள் மன்னாரில் பேரணி ஒன்றை நடத்தினர்.

மடு தேவாலயப் பகுதியில் யுத்த முன்னெடுப்புக்கள் எதனையும் மேற்கொள்வது இல்லை என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளார்கள். மடுவை நோக்கி முன்னேறி வரும் படையினர் மீது விடுதலைப் புலிகள் மடு தேவாலயப் பகுதியின் எல்லைக்கு அப்பால் நின்றபடியே எதிர் தாக்குதலை நடத்துகிறார்கள்.

அதே வேளை சிறிலங்காப் படையினர் மடு தேவாலயப் பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மடு தேவாலயத்தின் கட்டிடங்கள் சில சேதமாகியும் உள்ளன. நேற்று நடந்த தாக்குதலில் மடு பங்குத் தந்தையும் பரிபாலகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். மக்கள் வெளியேறிய பின்னரும் தொடர்ந்து அங்கே நின்ற பங்குத் தந்தையும் மற்றவர்களும் இந்த எறிகணைத் தாக்குதலின் பின்பே மடுவை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார்கள். வெளியேறும் போது மடு மாதாவின் உருவச் சிலையையும் தம்முடனேயே எடுத்துச் சென்றனர்.

மடுவை தமது படையினர் நெருங்கி விட்டதை இந்த நிமிடம் வரை சிறிலங்கா படைத் தரப்பு வெளியில் சொல்லாது மௌனம் சாதிக்கிறது. பொதுவாக சிறிலங்காப் படைத் தரப்பினர் தமது வெற்றிகளை மிகைப்படுத்தி சொல்வதே வழக்கம். சிறிலங்காப் படையினர் குடும்பிமலைக்கு சற்றுத் தொலைவில் நின்ற பொழுது, குடும்பிமலையின் உச்சியை புகைப்படம் மற்றும் விடீயோ எடுத்து வெளியிட்டனர். குடும்பிமலையை அண்மித்து விட்டோம் என்று பிரகடனப்படுத்தினர்.

அன்றைக்கு படையினர் குடும்பிமலையில் நின்ற தொலைவோடு ஒப்பிடுகின்ற பொழுது, தற்பொழுது மடுவுக்கு மிக அண்மையாகவே அவர்கள் நிற்கின்றார்கள். ஆயினும் சிறிலங்காவின் படை மற்றும் அரச தரப்பிலும் சரி, சிங்கள ஊடகங்களிலும் சரி, சிறிலங்காவிற்கு சார்பாக இயங்குகின்ற தமிழ் ஊடகங்களிலும் சரி, எங்கும் இது பற்றி மௌனமே நிலவுகிறது. எந்த வெற்றி ஆரவாரத்தையும் காணவில்லை.

இந்த மௌனத்திற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மடு தேவாலயப் பகுதியில் யுத்தம் நடைபெறுகிறது என்ற செய்தி உலகில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களின் கண்டனங்களை சிறிலங்கா அரசுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அத்துடன் விடுதலைப் புலிகள் பெரிய எடுப்பில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை நடத்தி படையினரை பல கிலோமீற்றருக்கு பின் தள்ளி விடலாம். இது போன்ற காரணங்களினால் மடுவை முழுதாகக் கைப்பற்றும் வரை, மடுவுக்கு அண்மையில் நடக்கின்ற சண்டை பற்றிய செய்திகளை சிறிலங்கா அரசு வெளியிடாது இருக்கின்றது.

ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு மடுவை கைப்பற்றும் பலம் சிறிலங்காப் படையினருக்கு உண்டு என்பதை எமது முன்னைய கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம். வரும் நாட்களில் மடு சிறிலங்காப் படையினரிடம் வீழ்ந்து விடும் சாத்தியங்கள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

மடுவை சிறிலங்காப் படையினர் கைப்பற்றக் கூடும் என்பதை விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்தரையன் அவர்களும் குறிப்பிட்டிருந்தார். "அவர்கள் நாளை மடுவிற்கு வரலாம், அடுத்த நாள் நாங்கள் மதவாச்சிக்குப் போகலாம்" என்று கள யதார்த்தத்தை மிக அழகாகச் சொல்லியிருந்தார். சார்ளஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் அவர்களும் "அன்றைக்கு மாங்குளம் வரை வந்தவர்கள் ஈரட்ட எங்கே என்று கேட்டு ஓடினார்கள், இன்றைக்கு மடுவிற்கு வர நிற்பவர்கள் நாளை மதவாச்சி எங்கே என்று ஓடுகின்ற நிலை வரும்" என்று சொல்லியிருக்கிறார்.

உண்மையான கள நிலைமை என்பது இதுதான். ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு நிலப் பகுதியை கைப்பற்றும் பல சிறிலங்காப் படைக்கு உண்டு. இதை சிறிலங்காவின் படைத் தரப்பு பலமுறை நிரூபித்திருக்கிறது. ஆனால் அப்படிக் கைப்பற்றுகின்ற நிலப் பரப்பை ஒரு குறுகிய நேரத்தில் மீளக் கைப்பற்றும் பலம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. விடுதலைப் புலிகளும் இதை பல முறை நிரூபித்திருக்கிறார்கள்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் பலம் வளர்ந்து கொண்டு போவதை நாம் அவதானிக்க முடியும். ஜெயசிக்குறு படை நடவடிக்கையின் போது, ஒரு ஆண்டு காலப் பகுதியில் சிறிலங்காப் படையினர் ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர் தூரம் முன்னேறி இருந்தனர். பல நூறு சதுர கிலோமீற்றர் பரப்பளவு அவர்களுடைய கட்டுப்பாட்டில் வந்திருந்தது.

ஆனால் ஒரு ஆண்டு போரிட்டு, பல நூறு படையினரை பலி கொடுத்து, பல ஆயிரம் படையினர் காயங்களுக்கு உள்ளாகி ஐந்து கிலோமீற்றர்களுக்கும் குறைவான தூரமே சிறிலங்காப் படையினரால் தற்பொழுது முன்னேற முடிந்துள்ளது. இது எந்த வகையிலும் ஒரு வெற்றி அல்ல என்பதை சாதரண ஒரு மனிதனால் கூட புரிந்து கொள்ள முடியும்.

ஆயினும் சிறிலங்கா அரசு செய்கின்ற பரப்புரைகள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்த மக்கள் பலரின் மனவுறுதியை தளரச் செய்து விடுகின்றன. மடுவைக் கைப்பற்றி சிறிலங்கா அரசு அதை ஒரு பெரு வெற்றியாக பரப்புரை செய்கின்ற போது, அந்தப் பரப்புரைக்குள் தம்மை அறியாது வீழ்ந்து விடுகின்ற நிலையிலேயே பல புலம்பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள்.

இந்த வேளையில் கிழக்கில் நடக்க இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலும் சிறிலங்கா அரசின் பரப்புரைக்கு மேலும் வலுச் சேர்க்கும். கிழக்கின் மாகாண சபைத் தேர்தலில் சில ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கின்றன. சூழ்ச்சி மிகுந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவில் மாகாண சபை என்பது எவ்வித அதிகாரமும் அற்ற ஒரு சபை. ஆனால் அதில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் உட்பட முஸ்லீம் காங்கிரஸை சேர்ந்த மூவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருக்கிறார்கள். இதிலே அவர்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். "கிழக்கு என்பது முஸ்லீம் மக்களின் தாயகம், இதனுடைய அரசியல் அடையாளத்தை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்ற செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

அத்துடன் முஸ்லீம் காங்கிரஸில் இருந்து பிரிந்த அதாவுல்லாவின் செல்வாக்கு கிழக்கில் வளர்வதை தடுக்க வேண்டிய கட்டாயத்திலும் ஹக்கீம் இருக்கிறார். கடந்த நடாளுமன்றத் தேர்தலில் அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து போயிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. சிறிலங்கா அரசும் மிகத் தந்திரமாக அதாவுல்லாவை முன்னிறுத்தி வருகின்றது. தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸில் இருந்து புதிதாக வந்துள்ள ஹிஸ்புல்லாவையும் முன்னிறுத்த முனைகிறது.

சிறிலங்கா அரசு பிரித்தாளும் தந்திரத்தை மிகத் திறமையாகக் கையாண்டு வருகின்றது. தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையுணர்வை தொடர்ந்து வளர்த்து, முதலமைச்சர் தெரிவில் ஒரு குழப்பத்தை உருவாக்குவதற்கு காய்களை நகர்த்தி வருகிறது. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சர் பதவிக்காக பிள்ளையானையும் அதவுல்லா மற்றும் ஹஸ்புல்லாவையும் முரண்பட வைத்திருக்கிறது. அதிகளவில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் வாக்களிக்கச் செய்யும் தந்திரமும் இதற்குள் அடங்கியிருக்கிறது.

கிழக்கில் 38 இடங்களுக்கு போட்டி நடக்கிறது. தற்பொழுது உள்ள நிலையில் ஒரு அண்ணளவாக கணிப்பீட்டின்படி 15 தமிழர்களும், 10 சிங்களவர்களும், 13 முஸ்லீம்களும் தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல குழப்பங்களை இது ஏற்படுத்தும்.

அதாவுல்லா, ஹஸ்புல்லா, ஹக்கீம், பிள்ளையான் என்ற பல தரப்புப் போட்டிகள் கடைசியில் ஒரு சிங்களவரை முதலமைச்சர் ஆக்குகின்ற அளவிற்கு கொண்டு வந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர்களில் பெரும்பாலானோர் மகிந்தவிற்கே வாக்களித்ததை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

இவ்வாறு ஒரு புறம் கிழக்கில் நடைபெறவுள்ள மகாணசபைத் தேர்தலின் மூலமும் மறுபுறம் வடக்கில் மடு சிறிலங்காப் படைகளினால் கைப்பற்றப்படுமாயின் அதன் மூலமூம் சிறிலங்கா அரசு ஒரு பெரும் பரப்புரையை முன்னெடுக்கும். அந்தப் பரப்புரையினால்; உறுதி தளராது இருக்க வேண்டியதே தமிழ் மக்களின் முன்னுள்ள தேவையாகும்.

விடுதலைப் புலிகளின் பலம் அப்படியே தக்க வைக்கப்பட்டிருப்பதோடு, மேலும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஒரு சரியான தருணத்திற்காக விடுதலைப் புலிகளின் படையணிகள் காத்திருக்கின்றன. அந்தத் தருணம் வந்ததும் கள நிலமை அப்படியே தலைகீழாக மாறும். கிழக்கில் நடைபெறப் போகின்ற தேர்தல் குழப்பங்களும் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே தமிழர்களுக்கு பலம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும்.

ஆகவே சிங்கள அரசின் பரப்புரைக்கு முகம் கொடுத்து, எமது போராட்டத்தை மேலும் உறுதியோடு முன்னெடுப்போம்.


- வி.சபேசன் (04.04.08)