கிழக்குத் தேர்தல் - அன்றும் இன்றும்
"கலைஞரின் பேச்சு சரியா?" என்னும் கட்டுரையில் அமிர்தலிங்கத்தை இந்திய உளவுத்துறையே
மாத்தையா குழுவின் ஊடாக படுகொலை செய்தது என்பதைப் பற்றி எழுதியிருந்தோம்.
அமிர்தலிங்கம் மீது இந்தியாவிற்கு கசப்புணர்வுகள் வந்ததற்கு பல காரணங்கள்
இருக்கின்றன. தற்பொழுது இலங்கை அரசு கிழக்கு மாகாண சபைக்கு ஒரு மோசடித் தேர்தலை
நடத்த இருப்பது போல், அன்றைக்கு இந்திய அரசு வட-கிழக்கு மாகாண சபைக்கு ஒரு மோசடித்
தேர்தலை நடத்தியது.
அப்பொழுது அமிர்தலிங்கம் சென்னையில் இருந்தார். இந்திய அரசின் சார்பில் பலர்
அமிர்தலிங்கத்தை சந்தித்து வட-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும்படி
வற்புறுத்தினர். ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் தலைவராக இருந்த பத்மநாபாவும் சென்னையில்
அமிர்தலிங்கத்தை சந்தித்தார். மகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் விடுதலைப்
புலிகளை அரசியல்ரீதியாக ஓரங்கட்டி விடலாம் என்பதை சொல்லி தமிழர் விடுதலைக் கூட்டணி
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பத்மநாபா கேட்டுக் கொண்டார்.
ஆனால் அமிர்தலிங்கம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய
இராணுவத்திற்கு இடையில் போர் நடக்கும் நிலையில் தாம் மகாண சபைத் தேர்தலில்
பங்குபற்ற விரும்பவில்லை என்று அமிர்தலிங்கம் தெரிவித்து விட்டார்.
இது இந்திய அரசுக்கு ஒரு பின்னடைவாகப் போய் விட்டது. ஈபிஆர்எல்எவ் போன்ற ஆயுதக்
குழுக்களை விட தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற அரசியற் கட்சி ஒன்று வட-கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதையே இந்திய அரசு விரும்பியது. இதன் மூலம் ஈழத்
தமிழர் பிரச்சனையை தீர்த்து விட்டதாக உலக அரங்கில் பரப்புரை செய்வதோடு விடுதலைப்
புலிகளையும் ஓரங்கட்ட முடியும் என்று இந்திய அரசு உறுதியாக நம்பியது.
ஆனால் இந்த விடயத்தில் அமிர்தலிங்கம் இந்திய அரசின் திட்டத்திற்கு துணை போகவில்லை.
இது போன்ற சில முரண்பாடுகளே அமிர்தலிங்கத்தை இந்தியாவிற்கு வேண்டத் தகாதவராக
ஆக்கியது. பின்பு விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் நடந்த
பேச்சுவார்த்தைய குழப்புவதற்கு இந்திய உளவுத்துறை மாத்தையா குழுவின் துணையோடு
அமிர்தலிங்கத்தை கொலையும் செய்தது.
அமிர்தலிங்கம் மறுத்து விட்ட நிலையில் இந்திய அரசு மாற்றுத் திட்டங்களில் இறங்கியது.
ஏற்கனவே தேர்தலில் போட்டியிட சம்மதித்திருந்த ஈபிஆர்எல்எவ்-ஈஎன்டிஎல்எவ்
கூட்டணிக்கு நிதி வழங்கி தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டது. வடக்கில் போட்டியிட
வேறு எந்தக் கட்சிகளோ இயக்கங்களோ முன்வரவில்லை.
அன்றைக்கு 1988இல் நடந்த வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரு விடயம்
கவனிக்கத்தக்கது. இன்று போல் அன்றும் வடக்கில் தேர்தல் நடக்கவில்லை. ஈபிஆர்எல்எவ்
இயக்கமும் ஈஎன்டிஎல்எவ் இயக்கமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியைத்
தவிர வேறு யாரும் வடக்கில் போட்டியிடவில்லை. அந்த வகையில் வடக்கில் வாக்களிப்பு
நடைபெறவில்லை. கிழக்கில் மட்டுமே தேர்தல் நடந்தது. தற்பொழுதும் கிழக்கில்
மட்டும்தான் தேர்தல் நடக்கின்றது.
கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் போட்டியிட்டன.
முஸ்லீம் காங்கிரஸிற்கு அதுதான் முதலாவது தேர்தலாகவும் அமைந்தது. முஸ்லீம் மக்கள்
வாழும் தொகுதிகளில் முஸ்லீம் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது.
முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது ஈபிஆர்எல்எவ் கூட்டணிக்கு ஒரு
வாய்ப்பாக போய்விட்டது. கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பகமை
உணர்வை சிறிலங்கா அரசு வளர்த்து விட்டிருந்தது. ஈபிஆர்எல்எவ், ஈஎன்டிஎல்எவ் போன்ற
இயக்கங்களும் முஸ்லீம்களுக்கு எதிரான அடாவடி நடவடிக்கைகள் மூலம் அதற்கு துணை போயின.
மறுபுறும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை
நடத்தியிருந்தன.
இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் சாரை சாரையாக சென்று தேர்தலில் பங்கு பற்றுவதை
அறி;ந்த தமிழ் மக்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தேர்தலில் போட்டியிட்ட
ஒரேயொரு தமிழ் கட்சியான ஈபிஆர்எல்எவ்-ஈஎன்டிஎல்எவ் கூட்டணிக்கு வாக்களித்தனர்.
தமிழர்களின் பகுதிகளில் முற்பகலில் வெறிச்சோடிப் போயிருந்த வாக்களிப்பு நிலையங்களில்
பிற்பகலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை காணக் கூடியதாக இருந்தது.
முஸ்லீம் கட்சிகள் கிழக்கில் வென்று விடக் கூடாது என்ற காரணத்தினால் கிழக்கில் தமிழ்
மக்கள் தேர்தலை ஒரு போதும் புறக்கணிப்பது இல்லை. விடுதலைப் புலிகளோ, தமிழ் தேசியக்
கூட்டமைப்போ தேர்தலில் போட்டியிடாத நிலையில் கிழக்கின் தமிழ் மக்கள் ஏதாவது ஒரு
தமிழ் கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ வாக்களிக்கின்ற நிலையே காணப்படுகிறது.
1988இல் நடந்த தேர்தலில் வடக்கில் போட்டியின்றி ஈபிஆர்எல்எவ்-ஈஎன்டிஎல்எவ் கூட்டணி
வெற்றி பெற்றது. வடக்கின் 36 ஆசனங்களும் இந்தக் கூட்டணிக்குப் போய் சேர்ந்தன.
கிழக்கில் இந்தக் கூட்டணிக்கு 15 இடங்கள் கிடைத்தன. முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு
17 இடங்கள் கிடைத்தன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது.
இது அன்றைக்கு இந்திய அரசு நடத்திய மாகாண சபைத் தேர்தலின் முடிவு. அன்றைக்கு
வடக்கிலும் கிழக்கிலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று உலகிற்கு காட்டுவதற்கு
இந்திய அரசு இந்தத் தேர்தல் நாடகத்தை நடத்தியது. இன்றைக்கு இலங்கை அரசு கிழக்கில்
பிரச்சனை தீர்ந்து விட்டது என்று உலகிற்கு காட்டவும், வடக்கு கிழக்கு பிரிப்பை
உறுதி செய்யவும் இந்தத் தேர்தலை நடத்துகிறது.
எப்படி அன்றைக்கு இந்திய அரசின் திட்டம் ஒரு கேலிக்கூத்தாக முடிந்தது அதே போன்று
இலங்கை அரசின் இன்றைய திட்டமும் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை.
ஆயினும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் ஏற்படுத்தக் கூடிய சில விளைவுகள்
குறித்து சில கவலைகள் உண்டு. மனித குலத்திற்கு எதிரான மிகப் பெரும் குற்றங்களை
செய்து வரும் பிள்ளையான் குழு தேர்தலில் வெற்றி பெற்று பிள்ளையான் கிழக்கின்
முதலமைச்சர் ஆகி விடுவாரா என்ற கவலை அதில் முக்கியமானது.
தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய இடங்களை ஓரளவு கணிப்பதன் மூலம் பிள்ளையான்
முதலமைச்சர் ஆவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா என்று பார்க்கலாம். மட்டக்களப்பில் 11
இடங்களுக்கு போட்டி நடக்கிறது. மட்டக்களப்பில் அண்ணளவாக 75வீதமான தமிழர்களும்
24வீதமான முஸ்லீம்களும் 1 வீதமான சிங்களவர்களும் வாழ்கிறார்கள். சிறிலங்காப்
படைகளின் துணையோடு பிள்ளையான் குழுவின் முற்றுமுழுதான ஆதிக்கத்தில் தமிழர்கள் வாழும்
பகுதிகள் இருக்கின்றன.
மட்டக்களப்பில் தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய 8 இடங்களையும் பிள்ளையான் குழுவே
அனைத்துவிதமான மோசடிகளின் மூலமும் பெறும் என்ற நிலையே தற்பொழுது காணப்படுகிறது.
மற்றைய மூன்று இடங்களையும் முஸ்லீம் காங்கிரஸ் பெறுமா அல்லது மகிந்தவோடு கூட்டணி
அமைத்துள்ள ஆதாவுல்லாவின் கட்சி பெறுமா என்பது உறுதியாக கணிக்கப்பட முடியாத
ஒன்றாகவே இருக்கிறது. ஆயினும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக முஸ்லீம் காங்கிரஸிற்கு
வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
அம்பாறையில் முஸ்லீம் மக்களும் சிங்களவர்களும் ஏறக்குறைய ஒரே அளவில் வாழ்கிறார்கள்.
சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களால் 20 விழுக்காட்டிற்கும் குறைவான
தமிழர்களே இன்று அம்பாறையில் உள்ளார்கள். இந்த நிலையில் அங்கிருந்து பெறக்கூடிய 14
இடங்களில் இரண்டிலிருந்து மூன்று வரையான இடங்களை பிள்ளையான் குழு கள்ளவாக்குகள்
மூலம் பெற்று விடும்.
திருகோணமலையில் மூன்று இனத்தவரும் சமமாக வாழ்கிறார்கள் என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால் தொடர்ந்து நடந்த போர்களினால் தற்பொழுது தமிழர்கள் மூன்றாம் இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளார்கள். அங்கு வாழும் மக்களில் ஏறக்குறைய 28விழுக்காடினரே தமிழர்கள்
ஆவார்கள். திருகோணமலையில் இருந்து பெறக்கூடிய 10 இடங்களில் மூன்று இடங்கள் வரை
பிள்ளையான் குழு பெற்றுவிடலாம்.
இப்படி கிழக்கின் 35 இடங்களில் 13இலிருந்து 14 இடங்கள் வரை பிள்ளையான் குழு
தன்னுடைய அராஜக நடவடிக்கைகள் மூலம் பெற்றுக் கொள்ளும். சிறிலங்கா அரசின் முழு
ஆசீர்வாதமும் பிள்ளையான் குழுவிற்கு இருப்பதால் பிள்ளையான் குழு தேர்தலின் போது
செய்யப் போகின்ற மோசடிகளை யாரும் தடுக்கப் போவதில்லை.
சிங்களவர்களும் முஸ்லீம்களும் வாழும் பகுதிகளலேயே தேர்தல் ஓரளவு ஒழுங்கான முறையில்
நடக்கும். முஸ்லீம் மக்கள் ஒருமித்து முஸ்லீம் காங்கிரஸிற்கு வாக்களிக்கின்ற போது,
அந்தக் கட்சிக்கும் 14 இடங்கள் வரை கிடைக்கும்.
இங்கே இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. தேர்தலில் அதிகமான வாக்குகளை பெறுகின்ற
கட்சிக்கு மேலதிகமாக இரண்டு இடங்கள் வழங்கப்படும். 1988இல் நடந்த தேர்தலில் இந்த
இரண்டு இடங்களையும் முஸ்லீம் காங்கிரஸ் பெற்றது. இம் முறையும் முஸ்லீம் காங்கிரஸ்
கட்சியே பெறுமானால் பிள்ளையானின் முதலமைச்சர் கனவு சற்று ஆட்டம் காணலாம்.
அதை விட அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள சிங்கள மக்கள் எந்தக் கட்சிக்கு
வாக்களிப்பார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது
சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக மகிந்தவிற்கே வாக்களித்தார்கள். கிழக்கை விடுதலைப்
புலிகளிடம் இருந்து கைப்பற்றி இருப்பதும் மகிந்தவின் செல்வாக்கை சற்று அதிகரிக்கும்
விடயங்களாக கருதப்படுகிறது.
ஆயினும் பிள்ளையானுடனான கூட்டணி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவை சிங்களவர்கள்
மத்தியில் அதிருப்தியை வளர்த்துள்ளன. இவைகள் மகிந்தவின் கட்சியை பாதித்து ஐக்கிய
தேசியக் கட்சிக்கும் சிங்களவர்கள் வாக்களிக்கின்ற போது, பிள்ளையான்
முதலமைச்சராவதற்கான வாய்ப்புகள் அடைபட்டுப் போய் விடும்.
பிள்ளையான் முதலமைச்சர் ஆவதை முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களுமே தீர்மானிக்கப்
போகிறார்கள். தமிழீழப் போராட்டம் ஆரம்பமானதன் பின்பு கிழக்கில் வாழும் தமிழ்
மக்களால் தேர்தல் ஒன்றில் தாம் விரும்பியபடி வாக்கை செலுத்த முடியாமல் இருப்பதானது
தொடர்கதையாகவே தொடர்கிறது.
இந்தக் கேலிக்கூத்தான தேர்தலின் மூலம் சிறிலங்கா அரசு நீண்டகால நோக்கில் எதையும்
சாதிக்கப் போவது இல்லை. வடக்கில் சிங்கள இராணுவ இயந்திரத்தை முடமாக்கி வரும்
விடுதலைப் புலிகள், நேரம் வருகின்ற போது கிழக்கில் உள்ள சிங்கள மற்றும் ஒட்டுப்
படைகளுக்கும் ஒரு முடிவு கட்டுவார்கள்.
வி.சபேசன் (08.05.08)